இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு போட்டியா? – ஹேமங் பதானி விளக்கம்

மும்பை,

நடந்து முடிந்த 8-வது உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் உலகக் கோப்பை தோல்வி எதிரொலியை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழுவில் உள்ள அனைவரையும் நீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடி உத்தரவிட்டது. ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி மற்றும் தேபாசிஷ் மொகந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தேர்வு குழுவில், தலைவர் உள்ளிட்ட 5 பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. பிசிசிஐயின் இந்த அதிரடி உத்தரவு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கான போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த தகவலுக்கு ஹேமங் பதானி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

எனது அன்பான ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும்.. சில தெளிவுபடுத்துதலுக்காக இதை இங்கே பதிவிடுகிறேன். பிசிசிஐ தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமையாகவும், கவுரவமானது என்றாலும், பல்வேறு ஊடகங்களில் வெளிவருவது போல் நான் பிசிசிஐ தேர்வுக்குழு பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். விண்ணப்பித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.