கொரோனாவை விட கொடிய ஒட்டக காய்ச்சல் பரவல்…!! பிபா கால்பந்து ரசிகர்களுக்கு ஆபத்து?

தோஹா,

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ந்தேதி தொடங்கி வருகிற டிசம்பர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி தொடரை 10 லட்சத்திற்கும் கூடுதலான பார்வையாளர்கள் கண்டு களிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கால்பந்து போட்டி தொடர் தொடங்கி 10 நாட்கள் ஆன நிலையில், உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் புது எச்சரிக்கையை விடுத்து உள்ளனர். மெர்ஸ் எனப்படும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்பட கூடிய சுவாச பாதிப்பு, ஒட்டக காய்ச்சல் என பரவலாக அழைக்கப்படுகிறது.

இது, கொரோனாவை விட கொடியது என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். கொரோனா மற்றும் எம்பாக்ஸ் (குரங்கம்மை) உள்ளிட்ட அதிக ஆற்றல் வாய்ந்த தொற்று ஆபத்துகளை ஏற்படுத்த கூடிய 8 பாதிப்பு வகைகளில் ஒட்டக காய்ச்சலும் ஒன்று என சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது.

அந்த அறிக்கையின்படி, கத்தாரில் 28 பேருக்கு மெர்ஸ் பாதிப்பு (10 லட்சம் பேரில் 1.7 பேருக்கு பாதிப்பு) ஏற்பட்டு உள்ளது என நோய்த்தொற்று அறிவியல் தரவு தெரிவிக்கின்றது. இவற்றில் பலர் ஒட்டகத்துடன் தொடர்புடையவர்கள் என கடந்த கால பதிவு தெரிவிக்கின்றது.

மெர்ஸ் தொற்று ஏற்பட கூடிய பேராபத்து உள்ளவர்கள், டிராமெடரி என்ற அதிகம் உயரம் கொண்ட ஒரு வகை ஒட்டகங்களுடனான தொடர்பை தவிர்க்க வேண்டும் என ஆய்வு தெரிவிக்கின்றது.

இதன்படி, ஒட்டக பாலை காய்ச்சாமல் பச்சையாக குடிப்பது, ஒட்டகத்தின் சிறுநீரை குடிப்பது மற்றும் அவற்றின் இறைச்சியை முறையாக சமைக்காமல் சாப்பிடுவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என ஆய்வு தெரிவிக்கின்றது.

மெர்ஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச கோளாறு ஆகிய பொதுவான அறிகுறிகள் காணப்படும். நிம்மோனியா காய்ச்சலும் காணப்படும். எனினும், மெர்ஸ் நோயாளிகளுக்கு எப்போதும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை.

வயிறு தொடர்பான டயோரியா எனப்படும் வயிற்று போக்கு போன்றவையும், மெர்ஸ் நோயாளிகளிடம் காணப்படும். இதனால், இறப்பு விகிதம் 35% என்ற அளவில் உள்ளது.

இந்த காய்ச்சல் ஆனது, விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையே எளிதில் பரவ கூடியது. தவிர, நோய் தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து, நேரடியாகவோ அல்லது மறைமுகம் ஆகவோ கூட மற்றொரு நபருக்கு தொற்று பரவ கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் கடந்த 2012-ம் ஆண்டில் முதன்முறையாக இந்த ஒட்டக காய்ச்சல் எனப்படும் மெர்ஸ் பாதிப்பு உறுதியானது. மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் இந்த மெர்ஸ் வகை பாதிப்பு அடையாளம் காணப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 27 நாடுகளில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மெர்ஸ் பாதிப்பு மற்றும் அதனால் தொடர்புடைய பிற இணை நோய்களால் அறியப்பட்ட மரணம் 858 ஆக உள்ளது என அறிக்கை வழியே தெரிய வந்துள்ளது.

இதனால், மத்திய கிழக்கு பகுதியில் அமைந்த கத்தார் நாட்டில் பிபா கால்பந்து உலக கோப்பை போட்டியை காண சென்றுள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் கவனமுடன் இருக்கும்படியும் நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்து உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.