“திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுக்கிறார்”-வேலூர் ஆட்சியரிடம் மண்டியிட்டு விவசாயி புகார்

பேர்ணாம்பட்டில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க மனு கொடுத்தால் திமுகவினர் கொலை மிரட்டல் விடுவதாகவும், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம்  விவசாயி ஒருவர் மனு அளித்துள்ளார்.   

மாதந்தோறும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் டிஆர்ஓ தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர். அனைத்து துறை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குகொண்ட விவசாயிகள், குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியில் மூடப்பட்ட அலுமினிய தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டதால் அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

image
அதே போல் பேர்ணாம்பட் அடுத்த பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணண் என்பவர் கூறுகையில், “எங்கள் பகுதியில் உள்ள பத்தலப்பள்ளி மலட்டாறு மற்றும் மலை பகுதிகளில் திமுக பிரமுகர் ராஜமார்த்தாண்டம் என்பவர் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார். இதனால் விவசாயம் பாதிக்கிறது என அதிகாரிகளிடம் மனு அளித்ததால் என்னை கார் ஏற்றி கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
நான் தனியாக வீட்டில் வசித்து வருகிறேன். என்னுடைய தாய்க்கு, 90 வயதுக்கு மேல் ஆகிறது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் என் தாயும் அச்சத்தில் உள்ளார். என்னை காப்பாற்றுங்கள்” எனக் கூறி ஆட்சியரிடம் மண்டியிடு (கீழே படுத்து)  கோரிக்கை வைத்தார். இதைக்கேட்ட ஆட்சியர், “உங்க பிரச்னையையும் சேர்த்து நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கடந்த முறையும் இப்புகாரை கூறியிருந்தீர்கள். இந்த விஷயத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என ஆட்சியர் பதில் அளித்தார்.

image
அதேபோல அணைகட்டு அடுத்த அப்புக்கல் – மானியக்கொல்லை இடையே போதிய சாலை வசதி இல்லாததால் 13 ஆண்டுகளாக 25 க்கும் மேற்பட்ட குடும்பத்தார் பாதிக்கப்படுவதாகவும். ஓடை கால்வாயை தனிநபருக்கு பட்டா போட்டு கொடுத்ததை ஆய்வு செய்து சாலை அமைத்து தர வேண்டும் என கூறி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த முன்னால் ராணுவ வீரர் குமாரசாமி என்பவர் இன்று நடைபெற்ற வரும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் டிஆர்ஓ-விடம் தனது வாக்காளர் அட்டை, ரேசன் கார்டை ஒப்படைத்து புறப்பட்டு சென்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.