அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘ராவணன் மாதிரி பிரதமர் மோடிக்கு 100 தலையா இருக்கு?’’ என கிண்டலாக கூறினார்.
குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது.
பிரதமர் நரேந்திர மோடி, தான் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மாநகராட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், எம்.பி.தேர்தல் போன்றவற்றில் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரங்களில், அவர் தன்னைப் பற்றி மட்டுமே பேசுகிறார். ‘வேறு யாரையும் பார்க்க வேண்டாம், மோடியை மட்டும் பார்த்து ஓட்டுப்போடுங்கள்’ என்கிறார். உங்களது முகத்தை நாங்கள் எத்தனை முறைதான் பார்ப்பது? உங்களுக்கு எத்தனை அவதாரம்? ராவணன் மாதிரி உங்களுக்கு 100 தலையா இருக்கு? என கிண்டலாக கூறி சிரித்தார்.
இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ‘‘குஜராத்தின் வளர்ச்சி கொள்கை மற்றும் மக்களின் ஆதரவை பார்த்து வருத்தமடைந்துள்ள காங்கிரஸ் கட்சி குஜராத் மற்றும் குஜராத் மக்கள் பற்றி அவதூறு பேசுகிறது.
குஜராத் மக்கள் மீதான காங்கிரஸ் கட்சியின் வெறுப்புக்கு, மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சே சாட்சியம். இதுபோன்ற நடவடிக்கைக்காக, இந்த முறை யும் காங்கிரஸ் கட்சியினரை குஜராத் மக்கள் நிராகரிப்பர்’’ என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், ‘‘குஜராத் தேர்தல் நிலவரத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல், கட்டுப்பாட்டை இழந்து மல்லி கார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை ராவணன் என விமர்சிக்கிறார். குஜராத் மற்றும் அதன் புதல்வரை ‘மரண வியாபாரி’ என்பது முதல் ‘ராவணன்’ வரை காங்கிரஸ் கடசி தொடர்ந்து விமர்சிக்கிறது’’ என்றார்.
பாடம் கற்பிக்க வேண்டும்
பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு, இந்த தேர்தலில் குஜராத் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.