மும்பை: சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனமான விஏ டெக் வபாக், ஆசிய வளர்ச்சி வங்கியுடன் (ஏடிபி) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி, விஏ டெக் நிறுவனத்துக்கு ஏடிபி ரூ.200 கோடி வழங்கும். 5 ஆண்டுகள் 3 மாத கால அளவுடன் கூடிய மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் (என்சிடி) மூலம் இந்தத் தொகையை ஏடிபி வழங்கும். இந்தியாவில் தண்ணீர் தொடர்பான தனியார் துறையில் ஏடிபி முதலீடு செய்வது இதுவே முதல் முறை ஆகும்.
இதுகுறித்து விஏ டெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட கடன் அளவுக்கு உட்பட்டுதான் ஏடிபி-யிடமிருந்து என்சிடி மூலம் கடன் பெறப்பட உள்ளது. இந்தத் தொகை நிறுவனத்தின் நடைமுறை மூலதன செலவுக்காக பயன்படுத்தப்படும்.
சுத்தமான, பசுமை மற்றும் நீடித்த தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வரும் எங்கள் நிறுவனத்துடன் ஏடிபி ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்திருப்பது எங்கள் நிறுவனத்துக்கு கிடைத்த மிக முக்கிய அங்கீகாரம் ஆகும்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏடிபி தனியார் துறை செயல்பாட்டு பிரிவு இயக்குநர் சுசன்னே கபூரி கூறும்போது, “இந்தியாவில் ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. அத்துடன் சுத்தமான தண்ணீர் கிடைப்பதிலும் பிரச்சினை உள்ளது. இதற்கெல்லாம் தீர்வாக விஏ டெக் நிறுவனத்துக்கு கடன் வழங்குகிறோம்” என்றார்.