100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வெறும் 49 வினாடிகளில் முடித்து சாதனை படைத்த 80 வயது பாட்டி…!

லக்னோ,

விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டியிட்டு சாதித்து வருவதை பார்க்க முடியும். அந்தவகையில் இளம் பெண்களே பெரும்பாலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிவார்கள். ஆனால் உத்தர பிரதேசத்தின் மீரட்டில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 80 வயது பாட்டி ஒருவர் கலந்து கொண்டு பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். அதன்படி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வெறும் 49 நொடிகளில் கடந்து சாதித்துக் காட்டியிருக்கிறார் அந்த பாட்டி. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், அந்த பாட்டி தன்னைத் தானே உற்சாகப்படுத்திக்கொள்ளும் விதமாக கைகளை தட்டிக் கொண்டே குஷியாக பந்தயத்தில் ஓடத் தொடங்கியவர் ஒரு நொடி கூட எங்கேயும் நிற்காமல் அடுத்த 49வது நொடியில் 100 மீட்டரை கடந்திருக்கிறார். பாட்டி சரியாக இறுதிக் கோட்டை கடக்கும் வரை ஷாருக்கான் நடிப்பில் வந்த சக்தே இந்தியா படத்தின் பாடலை ஒலிக்கச் செய்து அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

இதில் முக்கிய அம்சம் என்றவென்றால் வெள்ளை நிற சேலையில் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்தபடி அந்த மூதாட்டி பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவுச் செய்திருக்கிறார். 80 வயதில் அத்தனை துள்ளலாக, அத்தனை அர்ப்பணிப்புடன் போட்டியில் பங்கேற்ற மூதாட்டி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறார் என்பது போட்டி நடந்த மைதானத்தில் அனைவரும் எழுந்து கரகோசம் எழுப்பி கைத்தட்டி பாராட்டியதை வீடியோவில் காணலாம்.

பந்தயத்தை முடித்த பிறகு மக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டபாட்டி தனது பயிற்சியாளரைக் கட்டிப்பிடித்து கொண்டாடினார்.

மாவட்ட தடகள நீட்-2022 என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஓட்டப்பந்தைய போட்டியை கிரிடா பார்தி மற்றும் குளோபல் சோஷியல் கனெக்ட் ஏற்பாடு செய்திருக்கிறது. மேலும், 100 மீட்டர் போட்டியில் ஓடி அசத்திய அந்த 80 வயது மூதாட்டியின் பெயர் பிரி தேவி பரலா. மீரட்டில் உள்ள வேத் இன்டர்நேஷனல் பள்ளியில் முதுநிலை தடகள சங்கத்தின் கீழ் நடைபெற்ற முதல் முதுநிலை மாவட்ட தடகளப் போட்டி-2022ல் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.