சென்னை: இந்திய கடல் எல்லை பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்திய கடலோரக் காவல் படை தயார் நிலையில் இருப்பதாக அதன் தலைமை இயக்குநர் வி.எஸ்.பதானியா தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், ரசாயனங்களை கப்பல்கள் மூலம் கொண்டு வரும்போது, சில நேரம் கசிவு ஏற்பட்டு, கடல் பகுதியில் மிகப் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், இப்பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கும் வகையில், இந்திய கடலோரக் காவல் படை சார்பில், 24-வது தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் தற்செயல் திட்டம் மற்றும் தயார்நிலை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்துக்கு கடலோரக் காவல் படை தலைமை இயக்குநர் வி.எஸ்.பதானியா தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:
இந்திய கடல் எல்லை பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், கடல் வளத்தைபாதுகாக்கவும், குறிப்பாக, எண்ணெய் மற்றும் ரசாயனக் கசிவு ஏற்படாமல் தடுக்கவும் இந்திய கடலோரக் காவல் படை கடமைப்பட்டுள்ளது. அதற்கு தயார் நிலையிலும் உள்ளது. புதிய பாதிப்புகள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இருக்கின்றன. இவற்றை எதிர்கொள்ள வலுவான கூட்டாண்மைமற்றும் ஒத்துழைப்போடு, தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.