கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குடிசலுார் கிராமத்தில், சிலர் மான்கறி சமைப்பதாக, வன உயிரினக்காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர், இன்று மாலை, ‘ஒசூர் கோல்டு ஃபார்ம்’ என்ற பண்ணையில் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு தங்கியிருந்த மூன்று பேர், மான் கறியை மசாலா தூக்கலாக சமைத்துக்கொண்டிருந்தனர்.

அவர்களைப் பிடித்து விசாரித்ததில், கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (43), தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த மாதேஷ் (38) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த மல்லேஷ் (43) என்பதும் தெரியவந்தது. புள்ளிமானை வேட்டையாடிய மூவருக்கும் தலா, 40 ஆயிரம் என மொத்தம், 1.2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், தேன்கனிக்கோட்டை சுற்றுப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
‘சார்… இது கெடாக்கறி’!
இது குறித்து வனச்சரக அலுவலர் முருகேசனிடம் பேசினோம். ‘‘சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, மசாலா கலந்து பாதி கறியை சமைத்து கொண்டு, மீதியை சமைக்காமலும் வைத்திருந்தனர். மான் எப்படி வேண்டையாடினீர்கள் என குற்றவாளிகளிடம் நான் கேட்டபோது, ‘சார்… இது கெடாக்கறி, மான் கறி இல்ல, வெறும் ஆட்டுக்கறிதான் சார்,’ என மழுப்பினர். விசாரணைக்குப்பின் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். வனத்தினுள் கன்னி வைத்து, ஐந்து வயத்துக்குட்பட்ட புள்ளிமானை வேட்டையாடி உள்ளார்கள். பண்ணை உரிமையாளரை அழைத்து விசாரித்ததில், அவருக்குத் தெரியாமல் குற்றவாளிகள் இப்படி செய்தது தெரியவந்தது’’ என்றார்.