புதுடெல்லி: சுனந்தா புஷ்கர் உயிரிழந்த வழக்கில் இருந்து அவரது கணவரான சசி தரூர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி காவல் துறையினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மூன்றாவது மனைவி சுனந்தா புஷ்கர். இவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார், சுனந்தா புஷ்கரின் உயிரிழப்புக்கு சசி தரூர் தூண்டுதலாக இருந்ததாக குற்றம்சாட்டினர். அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை நீதிமன்றம், சசி தரூர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து வழக்கில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி விடுவித்து உத்தரவிட்டது. தீர்ப்பு அளிக்கப்பட்டு 15 மாதங்கள் கழிந்த நிலையில் தற்போது டெல்லி போலீசார் இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா, சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளார்.