அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 
கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக செல்போன் பயன்பாட்டுத்தடை மற்றும் கண்ணிய உடை தொடர்பான சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையரின் நடவடிக்கைகளை தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகர் சீதாராமன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், “திருச்செந்தூர் கோயிலின் உள்ளே மொபைல் பயன்பாட்டிற்கு தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வுவின் முன்பு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் இணை ஆணையர், கோவிலில் செல்போன் பயன்பாட்டை தடுக்கவும், முறையான உடை அணிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அறிக்கை தாக்கல் செய்தனர்.
image
அதில்,
* நவம்பர் 14 முதல் கோவில் பணியாளர்கள் உட்பட கோவிலுக்குள் மொபைல் போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
* கோவில் வளாகத்தில் செல்போன்கள் வைக்கும் வகையில் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு டோக்கன் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
* கோவில் வளாகத்தின் 15 இடங்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
* கோவிலுக்குள் வரும் பக்தர்கள் தமிழகத்தின் பண்பாடு மற்றும் மரபினை காக்கும் வகையில் உடை அணிந்து வர வேண்டும். அது தொடர்பாக விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
*செல்போன் தடை தொடர்பாக கோவில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
*இவற்றை கண்காணிக்க மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை நியமனம் செய்யுமாறு தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
*செல்போன் பாதுகாப்பு அறையில் பாதுகாவலர்களை நியமனம் செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
image
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ஏற்கனவே மொபைல் போன் பயன்பாட்டை தடுக்கவும், கண்ணியமான உடை அணிந்து வருவதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் கோவிலின் கோரிக்கை குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக இந்த உத்தரவுகளை தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படியுங்கள் – பெண் எம்பி கன்னத்தில் விழுந்த அறை.. மேலே பறந்த நாற்காலி; செனகல் நாடாளுமன்றத்தில் பரபரப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.