சிறுமிகளின் ஆபாச வீடியோ புகார்; 12 மணி நேர சிபிஐ ரெய்டில் லேப்டாப், செல்போன் சிக்கின: திருச்சி ஆபீசில் வியாபாரி இன்று ஆஜர்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலைப்பட்டியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர் சுப்பிரமணியன். இவரது மகன் ராஜா(45). விவசாயியான இவர் 10 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில் சில ஆண்டுகள் வேலை பார்த்து வந்தார். இதைதொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய அவர், திருப்பூரில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள வெப்சைட்டுகளுக்கு பதிவேற்றம் செய்து பல கோடி ரூபாய் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல்களை சிபிஐக்கு மத்திய உளவு பிரிவினர் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில் ராஜா, சிறுமிகளின் ஆபாச புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜா வீட்டில் சோதனை நடத்த டெல்லி சிபிஐ அதிகாரிகள்(அயல்நாடு செயல்பிரிவு அதிகாரிகள்) திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். இதைதொடர்ந்து டெல்லியிலிருந்து நேற்று திருச்சி வந்த 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் மணப்பாறை பூமாலைப்பட்டியில் உள்ள ராஜா வீட்டுக்கு காலை 6 மணிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நடந்தது.

அப்போது ராஜாவின் செல்போன், லேப்டாப் மற்றும் கணினி, ஹார்டு டிஸ்க், பென் டிரைவ்களை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  ராஜா மிகப்பெரிய நெட்வொர்க்குடன் தொடர்பில் இருப்பதும்,  சிறுமிகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை மொபைல் செயலி மூலம் வெளிநாடுகளில் உள்ள வெப்சைட்டுகளுக்கு பதிவேற்றம் செய்து அவர் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து ராஜாவிடம் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் எப்படி கிடைத்தது? வேறு பகுதியில் வைத்து சிறுமிகளை ஆபாச வீடியோக்களை எடுத்து வெளிநாட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்தாரா? இதில் மிகப்பெரிய நெட்வொர்க் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்று துருவி துருவி விசாரணை நடத்தினர். மேலும் திருச்சி அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் இன்று காலை திருச்சி வந்துள்ளார்.  2வது நாளாக அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிக்கியது எப்படி…?
பெண் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை ஆபாச இணையதளத்தில் ராஜா தொடர்ந்து பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதற்கான பணம் டாலராக ராஜா வங்கி கணக்குக்கு வந்துள்ளது. இதைதொடர்ந்து டாலரை இந்திய பணமாக ராஜா மாற்றியுள்ளார். இதனால் பல மாதங்களாக ராஜாவின் வங்கி கணக்கு மற்றும் அவர் வெளிநாடுகளுக்கு பதிவேற்றம் செய்து வரும் இணையங்களை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இதில் தடை செய்யப்பட்ட இளம் சிறார்களின் ஆபாச வீடியோக்களை ராஜா வெளிநாட்டுக்கு விற்றது தெரியவந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.