சேலம்: சேலத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவால், வஉசி பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து சரிந்துள்ளது.குண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரம் விலையில் விற்பனையானது.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் பனிப்பொழிவால், பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. அதிகாலையில் நீடிக்கும் பனியின் காரணமாக பூ மொட்டுகள் உதிர்ந்து விடுகிறது. இதனால், பூக்கள் உற்பத்தி குறைந்து வரத்து மிகவும் சரிந்துள்ளது.
பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு தகுந்த பூக்களை விவசாயிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வராததால், விலை அதிகரித்துள்ளது. சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2 ஆயிரம் விலையில் விற்பனையானது. அதேபோல, முல்லை ரூ.1200, ஜாதிமல்லி ரூ.600, காக்கட்டான் ரூ.700, கலர் காக்கட்டான் ரூ.700, மலைக்காக்கட்டான் ரூ.700, அரளி ரூ.180, வெள்ளை அரளி ரூ.180, மஞ்சள் அரளி ரூ.180, செவ்வரளி ரூ.200, நந்தியாவட்டம் ரூ.200 ஆகிய விலைகளில் விற்பனையானது.
கார்த்திகை மாதம் சபரி மலை சீஸன் என்பதால் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், சபரி மலை செல்பவர்கள் வீடுகளில் பூஜைகளில் ஈடுபடுவதால், பூக்களின் தேவை அதிகரித்தள்ளது. இந்நிலையில், போதுமான பூக்கள் உற்பத்தியில்லாத நிலையில், பூக்கள் விலை ஏற்றம் கண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.