அஜித் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத்துடன் இணைந்திருக்கிறார். துணிவு என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்தை போனிகபூர் தயாரித்திருக்கிறார்.ஜிப்ரான் இசையமைக்க மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கபட்டிருப்பதாக கூறப்படும் துணிவு படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதாக தெரிகிறது. இதுவரை அஜித் நடித்த நெகட்டிவ் ரோல்கள் அனைத்தும் கவனம் ஈர்த்தவை என்பதாலும், க்ரைம் சம்பந்தப்பட்ட படங்கள் எடுப்பதில் வினோத் தனித்துவமானவர் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. படத்தை பொங்கலுக்கு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இதற்கிடையே வழக்கம்போல் இந்தப் படத்திலும் பைக் சேஸிங் காட்சிகள் இடம்பெற்றிருகின்றன. அதனை படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலினும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியிருந்தார். அஜித்தின் பைக் சாகசங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மங்காத்தாவில் ஆரம்பித்த அவரது பைக் சாகசம் அதற்கு பிறகு வெளியான அவரது படங்களில் பெரும்பாலும் இடம்பிடித்துவிடுகின்றன. அதேசமயம் தொடர்ந்து பைக் சேஸிங் சீன்கள் வைக்கப்படுவது ஒருவித அயர்ச்சியை தருவதாகவும் ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி அஜித் அந்த பைக் சேஸிங்கில் நடிப்பதில்லை. அவருக்கு பதிலாக அவர் உருவ அமைப்பை உடைய இன்னொருவரே நடிக்கிறார் எனவும் சிலர் கூறுவதுண்டு.
இந்நிலையில் துணிவு படத்தில் அஜித்திற்கு டூப் போடப்பட்டது. அந்த டூப்பில் நடித்தவர் பெயர் சுதாகர். அவர், “துணிவு படத்தில் 70 சதவீதம் அஜித் போர்ஷனில் நான் நடித்தேன்” என்று கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. மேலும் சுதாகர் என்பவர் அஜித் உள்ளிட்டோருடன் துணிவு கெட் அப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகியுள்ளது.
அதேசமயம் இந்தத் தகவல் உறுதியானதா என்பது தெரியவில்லை. மேலும் விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே இவ்வாறு எடிட் செய்து புகைப்படங்களை வெளியிடுகின்றனர் அஜித் ரசிகர்கள். இதனால் சமூக வலைதளங்களில் இருதரப்பினருக்கும் இடையே கமெண்ட் போர் நடந்துவருகிறது. முன்னதாக சென்னை அண்ணா சாலையில் துணிவு ஷூட்டிங் நடந்தபோது அதில் அஜித் நடிக்கவில்லை அவருக்கு பதிலாக டூப்தான் நடித்தார் என்று பலரால் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.