நான்கு ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! 32 சிம்கார்டுகள்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்


தமிழகத்தில் நான்கிற்கும் மேற்பட்ட ஆண்களை திருமண ஆசை காட்டி நகை, பணத்தை சுருட்டிய மோசடி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 நகை பணத்துடன் ஓட்டம் 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (25), ஒன்லைனில் உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வந்த இவர், அபிநயா (28) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆகத்து மாதம் நடராஜன்-அபிநயாவின் திருமணம், நடராஜனின் பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் நடந்தது.

இருவரும் வெவ்வேறு நகை கடைகளில் வேலைக்கு சேர்ந்தனர். ஒருநாள் மட்டும் வேலைக்கு சென்ற அபிநயா, அதன் பின்னர் வேலைக்கு செல்லாமல் நின்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் திகதி அபிநயா மாயமானார். அவரது இரண்டு செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மேலும், வீட்டில் இருந்த 17 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் புதிய பட்டுப்புடவைகள் காணாமல் போயிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் உடனடியாக பொலிஸில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய பொலிஸார் அபிநயாவின் ஆதார் அட்டையை கைப்பற்றினர்.

நான்கு ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! 32 சிம்கார்டுகள்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Woman Arrested Who Cheat Four Men Marriage

இரண்டாவது கணவருடன் சிக்கிய அபிநயா

அதில் மதுரை முகவரி இருந்தது.

இந்த நிலையில் செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள விடுதியில் அபிநயா தங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

விடுதிக்கு விரைந்த பொலிஸார் அங்கு தங்கியிருந்த அபிநயாவை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அபிநயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் மகன் உள்ள நிலையில், மேலும் 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

அதன் பின்னர் 10 நாட்களிலேயே அவரைப் பிரிந்த அபிநயா, மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

செந்தில்குமார்-அபிநயாவுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.

பின்னர் சென்னை கேளம்பாக்கத்தில் இளைஞர் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்த பின் 10 நாட்களில் அவரையும் விட்டு விலகியுள்ளார்.

அதன் பின்னர் தான் நடராஜனை ஏமாற்றியுள்ளார். அவரிடம் சுருட்டிய நகை, பணத்தை இரண்டாவது கணவர் செந்தில்குமாரிடம் கொடுத்து செலவு செய்துள்ளார்.

32 சிம்கார்டுகள் 

எனவே அவரையும் கைது செய்த பொலிஸார் அபிநயா பெயரில் வாங்கி வைத்திருந்த 32 சிம்கார்டுகளை கைப்பற்றினர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பலருடன் நெருங்கி பழகிய அபிநயா, சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவரிடம் இருந்து 2 பவுன் நகை மற்றும் பணத்தை பெற்றுள்ளார்.

தற்போது நடராஜன் மட்டுமே புகார் அளித்துள்ள நிலையில், இன்னும் எத்தனை பேர் அபிநயாவினால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.       



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.