நெல்லை, தூத்துக்குடியில் வீடு, நிறுவனங்களில் ஜொலிக்கும் `ஸ்டார்கள்: அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு

நெல்லை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கியுள்ளன. நெல்லையில் கிறிஸ்துமஸ்  ஸ்டார் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்புடன் நடந்து  வருகின்றன. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இரவு நேரங்களில் அலங்கார  நட்சத்திரங்கள் மின்னொளியில் ஜொலிக்கிறது.கிறிஸ்துமஸ்  பண்டிகை நாடு முழுவதும் வரும் டிச.25ம்தேதி வழக்கமான உற்சாகத்துடன்  கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விடும்.

இயேசு பிரானின் சிறப்பை விளக்கும் வகையில் குடில்கள் அமைத்தல், சிறப்பு பிரார்த்தனை, வீடுகளில் வண்ண, வண்ண ஸ்டார்கள்  என கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருக்கும். டிசம்பர் மாதம் நேற்று தொடங்கியதிலிருந்து கிறிஸ்தவ மக்கள், தங்கள் வீடு மற்றும் அலுவலகம், நிறுவனங்களின் முகப்பில்  மின்னொளி நட்சத்திரம், அலங்கார குடில்கள், ஈஸ்டர் மரம் மற்றும் இயேசு  கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் குடில்கள் ஆகியவற்றை அமைத்து கிறிஸ்துமஸ்  பண்டிகையை வரவேற்பது வழக்கம். இதையொட்டி தூத்துக்குடி, நெல்லை மற்றும் பாளை பகுதியில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள், குடில்கள்  உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன.

நெல்லை  முருகன்குறிச்சி சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலாயத்தில் இப்போதே இரவில் நட்சத்திரங்கள்  ஜொலிக்கின்றன. அணைத்து தேவாலாயங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகள்  தொடங்கி விட்டன. வர்த்தக மையங்களில் மின்னொளியில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ரூ.50 முதல்  ரூ.500 வரை பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்தவர்கள்,  கிறிஸ்துமஸ் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் தாத்தா உருவ பொம்மைகள்  மற்றும்  அலங்கார பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்று தங்களது வீடுகளை  அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வர்த்தக நிறுவனங்கள்  மற்றும் கிறிஸ்தவ மக்களின் வீடுகள் இரவு நேரத்தில் ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.