புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்குள் மாணவர்களுக்கு லேப்டாப், மதிவண்டி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை சார்பில் மண்டல அறிவியல் கண்காட்சி கடந்த 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தொடர்ந்து, மாநில அறிவியல் கண்காட்சி டிச.1, 2 ஆகிய தேதிகளில் நடந்தது. இக்கண்காட்சியை 120 பள்ளிகளில் இருந்து 15,735 மாணவர்கள், 809 பொது பார்வையாளர்கள், 687 ஆசிரியார்கள் பார்வையிட்டனர். கண்காட்சியின் நிறைவு விழா இன்று மாலை நடைபெற்றது. பள்ளி கல்வி இணை இயக்குநர் சிவகாமி வரவேற்றார். கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் எம்எல்ஏ வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மண்டல மற்றும் மாநில அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: ‘‘நான் சிறிய செல்போன்தான் வைத்துள்ளேன். ஆனால், பிள்ளைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் பல செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். அந்த அளவுக்கு நம்முடைய பிள்ளைகளுக்கு அறிவுத்திறன் உள்ளது. குழந்தைகள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பது அரசின் கடமை.
வாய்ப்பு அதிகமாக இருந்தால்தான் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள முடியும். புதிய தொழில்நுட்பம் என்பது மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாக உள்ளது. ஆசிரியர்களின் உறுதுணையாடு மாணவர்கள் அறிவியல் படைப்புகளை உருவாக்கி கண்காட்சியில் பங்கேற்கும் போது, அவர்களது எண்ணம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
பிள்ளைகளுக்கு தேவையான வசதி, வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்போது, அவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் மிக உயர்ந்த நிலையில் வருவார்கள். புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். உலக அளவில் நம்முடைய நாடு பெரிய வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது.
உலக அரங்கில் நம்முடைய நாடு சிறந்து விளங்குவதற்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கி, பெரிய வளர்ச்சியை கொண்டுவர பல முடிவுகளை எடுத்து வருகிறது. இதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும். விரைவில் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். நிறுத்தப்பட்ட திட்டங்களை மறுபடியும் தொடங்க நிதி ஒதுக்கி கொடுத்துள்ளேன்.
வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்குள் பிள்ளைகளுக்கு லேப்டாப், மிதிவண்டி வழங்கப்படும். அதேபோல் முட்டை, சீருடை விரைவில் வழங்கப்படும். பிள்ளைகள் நினைத்த படிப்பை படிப்பதற்கு அரசு அதிக நிதியை ஒதுக்கி பல கல்லூரிகளை கொண்டுவந்துள்ளது. தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ பல்கலைக்கழகத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுப்பதற்கான வாய்ப்பை அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. இதை பிள்ளைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிறைய பிள்ளைகள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதாக சிலர் நினைப்பார்கள். இதனால் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்கள் நிறைய படிக்கிறார்கள். அவர்களுக்கு அறிவுத் திறனும் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் தன்மை குறைவாக இருக்கிறது.
இதனால் பெரிய நிறுவனங்கள் நம்முடைய பிள்ளைகளை தேர்வு செய்ய தயக்கம் காட்டுவதாக கூறுகிறார்கள். இதனால் பிள்ளைகள் தயக்கமில்லாமல் பேச வேண்டும். பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல புதிய நிறுவனங்களை கொண்டுவர நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது. கல்வியில் புதுவை 2வது இடத்தை பெற்றிருக்கிறது. அடுத்து முதலிடம் பெற வேண்டும்’’என்று தெரிவித்தார்.