பழனி மலை அடிவாரத்தில் இருந்த ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் அருகில் இருக்கும் சிலர் கொடுத்த உணவுகளை வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், புதிதாக யாராவது உணவு பொருட்களை கொடுத்தால் அதை தூக்கி எறிவார்.
இப்படிப்பட்ட நிலையில் சிலர் அவரை தெய்வமாக நினைத்து வணங்க ஆரம்பித்தனர். கூட்டம் அதிகரித்த காரணத்தால் விபத்து ஏற்படும் அபாயத்தை தவிர்க்க அவருக்கு ஒரு குடில் அமைத்து வேறொரு பகுதியில் தங்க வைத்தனர். இவர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. சுற்றுவட்டார மக்கள் அனைவரும் வாகனங்களை எடுத்துக் கொண்டு வந்து இவரை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.
அரளி செடிக்கு நடுவில் எப்போதும் படுத்துக் கொண்டிருப்பதால் இவரை அரளி சித்தர் என்றும், இவர் பெயர் சுப்பிரமணி என்பதால் சுப்பிரமணி சித்தர் என்றும் பலரும் பல்வேறு பெயர்களை வைத்து அழைக்க ஆரம்பித்தனர். சிலர் இவரை வைத்து பணம் பார்க்கும் முயற்சியில் உண்டியல் ஒன்றை வைத்து அவர் எது சொன்னாலும் அப்படியே நடக்கும்., அவரை வணங்கி விட்டு சென்றால் நினைத்தது நடக்கும் என்று கிளப்பி விட அதை நம்பி பலரும் வந்து காணிக்கைகளை செலுத்தி விட்டு சென்றனர்.
அவர் மீது திருநீரை பூசி அவரை வைத்து பணவேட்டையாட சில கும்பல் அவரை பிரபல படுத்தும் செயல்களை துவங்கியது. இது குறித்து போலீசார் தெரிந்து கொண்ட நிலையில் அவரை மீட்டு மனநல மருத்துவமனையில் சேர்த்து விட்டு பண வேட்டை செய்ய முயன்ற நபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.