மைசூர்: சிறுத்தை தாக்கி கல்லூரி மாணவி பலி; சிறுத்தையை கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவா?

கர்நாடக மாநிலம், மைசூர் டி.நரசிபுரம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த, பத்து நாள்களாக குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, நாய், ஆட்டுக்குட்டி உள்ளிட்ட உயிரினங்களை கொன்றது. இது குறித்து மக்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு, டி.நரசிபுரம் அடுத்த கெப்பேஹண்டி கிராமத்தைச் சேர்ந்த அரசுக் கல்லுாரி இறுதியாண்டு மாணவி மேகனா (20), மாலை, 6:30 மணியளவில் தன் வீட்டின் பின்பக்கம் சென்றார். அப்போது, புதரில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென அவரைப் பிடித்து கொடூரமாக தாக்கி, 200 மீட்டர் வரையில் அருகிலுள்ள விளைநிலத்துக்கு தரதரவென இழுத்துச்சென்றது. வலியில் துடித்து கதறிய மேகனாவின் மரண ஓலத்தை கேட்டு பதறியடித்துக்கொண்டு கிராம மக்கள் அங்கு சென்றனர். மக்கள் வரும் சத்தம் கேட்டு சிறுத்தை மேகனாவை விட்டுச்சென்றது.

கல்லுாரி மாணவி மேகனா.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட மக்கள், டி.நரசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று (1ம் தேதி) இறந்தார். `எங்கள் கோரிக்கையை ஏற்று சிறுத்தையைப் பிடித்திருந்தால் மேகனா உயிர் போயிருக்காது. ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க வேண்டும்’ எனக்கூறி, மக்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்துக்கு வந்த அப்பகுதி எம்.எல்.ஏ அஸ்வின் குமார் மற்றும் வனத்துறையினர், ‘கூண்டு வைத்து விரைவில் சிறுத்தையை பிடிப்போம். இனி இறப்புகள் ஏற்படாது’ என உறுதியளித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஜனவரி முதல் நேற்று வரையில், மைசூர் பகுதியில் சிறுத்தை தாக்கி மட்டுமே, மேகனா, 19 வயது மாணவன் உட்பட நான்கு பேர் இறந்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

கல்லுாரி மாணவி மேகனா.

இந்த நிலையில், இன்று மதியம், மைசூர் வனக்கோட்ட வன உயிரின பாதுகாவலர் மாலதி பிரியா, `சிறுத்தையை கண்டதும் சுட்டுக் கொல்ல வேண்டும்’ என உத்தரவிட்டிருப்பதாக தகவல் பரவியது.

சம்பவம் குறித்து விசாரிக்க, மைசூர் வனக்கோட்ட வன உயிரின பாதுகாவலர் மாலதி பிரியாவை போனில் தொடர்பு கொண்டு பேசினோம். “இறந்த மேகனாவின் குடும்பத்தாருக்கு, 7.5 லட்சம் ரூபாய் இழப்பீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டு, பணியாளர்கள் இரவு பகலாக கண்காணிக்கின்றனர். சிறுத்தையை சுட்டுக் கொல்லும் முடிவு குறித்து இப்போது என்னால் எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது’’ எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.