புதுடில்லி :தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் தொடர்பான விவகாரத்தில், இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதருக்கு எதிராக, வெறுப்புணர்வு பதிவுகள் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்தில், இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்தது. இதில், மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் நடாவ் லபிட், நடுவர் குழுவுக்கு தலைமை வகித்தார்.
இந்த விழாவில் திரையிடப்பட்ட தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து லபிட் மோசமாக விமர்சித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தன் கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார்.
இயக்குனர் நடாவ் லபிட் கருத்துக்கு, இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதர் நாவோர் கிலான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் துாதர் நாவோர் கிலானுக்கு எதிராக சமூக வலைதளத்தில் சிலர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இது குறித்து நாவோர் கிலான் கூறியுள்ளதாவது:
இந்தப் பதிவை வெளியிட்டவரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அவர், பிஎச்.டி., பட்டம் பெற்றவர் என சுயகுறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
‘உங்களைப் போன்ற கழிச்சடைகளை எரித்துக் கொன்ற சர்வாதிகாரி ஹிட்லர் மிகச் சிறந்தவர். உடனடியாக இந்த நாட்டில் இருந்து வெளியேறுங்கள்’ என, அந்த நபர் பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து எனக்கு ஆதரவு தெரிவித்து பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்த ஒரு சிலரின் கருத்துக்களால், நம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்பு பாதிக்கப்படாது.
இதுபோன்ற மோசமான கருத்துக்களை உடையவர்கள் உள்ளனர் என்பதை சுட்டிக் காட்டவே இந்தப் பதிவை வெளியிட்டு உள்ளேன். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாகரிகமான முறையில் அதை விவாதிக்கலாம். இவ்வாறு வெறுப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement