கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புளியம்பாறையை சேர்ந்தவர் கல்யாணி (55). இவர் கணவரை பிரிந்து தனியே வசித்து வந்தார். நேற்று பக்கத்து வீட்டை சேர்ந்த 3 பெண்களுடன் வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றார். அப்போது மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை ஆவேசமாக ஓடி வந்தது. மற்ற 3 பெண்களும் சிதறி ஓட்டம் பிடித்தனர். கல்யாணி மட்டும் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டார். அவரை தும்பிக்கையால் சுழற்றி கீழே போட்டு காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கி கல்யாணி பலியானார். தகவலறிந்து போலீசார், கல்யாணியின் உடலை மீட்டனர். ஏற்கனவே இதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி என்ற பெண்ணை அரிசி ராஜா என்ற யானை தாக்கி கொன்றது. நேற்று முன்தினம் அது புளியம்பாறை பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். கல்யாணியை தாக்கியது அரிசி ராஜா யானையா? என்று வனத்துறையினர் ஆய்வு செய்கின்றனர்.
