ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலைக்கு நேற்று பெங்களூரில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூர் வழியே கடலூருக்கு வந்துள்ளார்.
அப்போது குறுக்கு வழியில் செல்ல கூகுள் மேப் ஒரு வழிகாட்டியுள்ளது. அதன்படி, லாரி ஓட்டுனரும் வந்து கொண்டிருந்தார். கடலூர் நகரில் இருக்கும் முதுநகர் இம்பீரியல் சாலை வழியே திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்று இருப்பதை கண்டு அதை பின்பற்றி சென்றுள்ளார்.
ஆனால், அதற்கு மேல் செல்ல முடியாமல் லாரியை திருப்பிக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த மக்கள் பேருந்து, ஆட்டோ இருக்கும் இடத்தில் சரக்கு லாரிக்கு என்ன வேலை என்று கத்தி கூச்சலிட்டனர். இதனால், பயந்து போன லாரி ஓட்டுனர் முருகன் வழி தெரியாமல் வந்து விட்டதாக கூறியுள்ளார்.
இவரை பார்த்து பரிதாபப்பட்ட மக்கள் அவருக்கு சிதம்பரம் சாலை வழியே சிப்காட்டிற்கு செல்ல வழிகாட்டியுள்ளனர். அதன்படி, அவரும் புறப்பட்டு சென்றுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் சரக்கு லாரி புகுந்ததால் அப்பகுதி மக்கள் பரபரப்புடன் காணப்பட்டனர்.
கூகுள் மேப் பயன்படுத்தி வாகன ஓட்டிகள் பலரும் சிக்கலில் சிக்கிக் கொள்வது புதிதல்ல என்றாலும், இது தொடர்ந்து வருவது வேடிக்கையானது.