புதுடில்லி பஞ்சாப் மாநிலம் லுாதியானா கோர்ட் வளாகத்தில் கடந்தாண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை, புதுடில்லி விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் உள்ள விசாரணை நீதிமன்ற வளாகத்தில், கடந்தாண்டு டிச., 23ல் பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்; ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் விசாரித்தனர்.
இதில், பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது.
இந்த அமைப்பின் தலைவர் லக்பீர் சிங்குடன் சேர்ந்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் இந்த குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியிருந்தார்.
தலைமறைவான ஹர்ப்ரீத் சிங்கை கைது செய்ய என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இவரை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தனர். இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு, 10 லட்சம் ரூபாய் சன்மானமும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் இருந்து புதுடில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று வந்த ஹர்ப்ரீத் சிங்கை, பாதுகாப்பு படையினர் கைது செய்து, என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ஹர்ப்ரீத் சிங்கிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement