திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 63 நாயன்மார்களின் மாட வீதியுலா நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின், 6-ம் நாள் உற்சவத்தில் யானை வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் ஆகியோர் நேற்று காலை எழுந்தருளி மாட வீதியுலா வந்தனர். இதேபோல், 63 நாயன்மார்களின் மாட வீதியுலா நடைபெற்றது. திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி, திருநாவுக்கரசர் ஆகிய சமயக் குரவர்கள் ‘நால்வர்’ ஒரே வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். சுவாமி, 63 நாயன்மார்களுடன் சென்ற சிவனடியார்கள், திருவாசகம் மற்றும் சிவபுராணம் பாடிக்கொண்டு சென்றனர். நாயன்மார்களை பள்ளி மாணவர்கள் சுமந்து சென்றனர்.
6-ம் நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான வெள்ளி தேரோட்டம் நேற்றிரவு நடைபெற்றது. விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியே வெள்ளி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் பவனி வந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்தும், தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் இன்று நடைபெறஉள்ளது. இதற்காக, பஞ்ச (ஐந்து)ரதங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் மாட வீதியில் பவனி வரவுள்ளனர். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்தபிறகு, அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும். 5 தேர்களும் ஒரே நாளில் பவனி வருவது கூடுதல் சிறப்பாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலை மீது ஏறி செல்ல 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வரும்6-ம் தேதி காலை 6 மணிக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.