அகமதாபாத்: குஜராத் 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
குஜராத்தில் கடந்த 1-ம் தேதி முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 63.31 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 14 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்திருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் சுட்டிக் காட்டின.
இந்த சூழலில் குஜராத்தில் நாளை 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வடக்கு மற்றும் மத்திய குஜராத்தை சேர்ந்த 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறும்போது, “கடந்த 1-ம் தேதி நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தலில் நகரங்களில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தது. இதை ஈடுகட்டும் வகையில் 2-வது கட்ட தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.