முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்!

ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நாலை காலை டெல்லி செல்லவுள்ளார். ஜி20 அமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பின் தலைமை இந்தோனேசியாவிடம் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் முடிவில் ஜி20 தலைமை இந்தியாவிடம் வந்துள்ளது. ஜி20 தலைமையை பிரதமர் மோடியிடம், முறைப்படி இந்தோனேசியா ஒப்படைத்து. டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு ஜி20 தலைவராக இந்தியா பதவி வகிக்கவுள்ளது. அதன்பிறகு, இந்த தலைமையை இந்தியா பிரேசிலிடம் ஒப்படைக்கவுள்ளது.

முன்னதாக, ஜி20 தலைமைக்கான இலச்சினை (லோகோ), கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார். தாமரை மலர் மீது பூமிப்பந்து இருப்பது போன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த லோகோவை வெளியிட்டு பிரதமர் மோடி பேசுகையில், “ஜி20 இலச்சினை என்பது வெறும் இலச்சினை அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், இது ஒரு செய்தி, இந்தியாவின் நரம்புகளில் ஓடும் உணர்வு.”என்றார்.

இந்த நிலையில், ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது பற்றி ஆலோசனை செய்வதற்காக கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நாளை விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மாநாட்டில் பங்கேற்று விட்டு, அன்றைய தினம் இரவே அவர் மீண்டும் சென்னை திரும்பவுள்ளார். டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் யாரையும் தனியாக சந்தித்து பேசுவதற்கான திட்டம் இல்லை என டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, மோடி – ஸ்டாலின் இடையேயான தனிப்பட்ட சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லை என தெரிகிறது.

ஒரே பூமி-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம் என்ற குறிக்கோளுடன் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளதாகவும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஜி20 மாநாடு நடைபெறும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி, ஜி20 மாநாடுக்கு முன்பாக 32 துறைகள் தொடர்பாக 200 கூட்டங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டங்கள் அடுத்த ஆண்டில் தொடங்க உள்ளன. ஜி20 மாநாடு தொடர்பான கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதற்கான இடங்களை தேர்வு செய்வதற்காக தமிழக அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

ஜி20 மாநாட்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களான மாமல்லபுரம் 5 ரதம், வெண்ணை உருண்டை பாறை, வேலூர் கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஜி20 என்ற எழுத்து வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளன. இதுபோல் இந்தியாவின் 100 தொல்லியல் சின்னங்களும் ஒளிரூட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.