இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததுவது:-
“இந்தியா ஜி-20 மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறது. இது நம் அனைவருக்கும் ஒரு பெருமைமிக்க நிகழ்வு. இந்த ஜி-20 அமைப்பிற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலத்தின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வருகிற 9-ந் தேதி அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் காணொளி கட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
எப்படி விவேகானந்தர் உலகத்தின் குருவாக பாரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதேபோல் இன்று நாம் ஒரு முன்னேற்றமான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் அனைவரும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து, தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுபற்றி கவர்னராக உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்ததாவது,
அரசியல் மூலம் “ஆன்லைன் ரம்மி” சட்ட மசோதாவை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று ஆளுநர் சில தகவல்களை தெரிவித்துள்ளார். ஆளுநர் என்றாலே எந்தவித சந்தேகமும் படாமல் உடனே கையெழுத்து போட வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
இந்த விவகாரத்தில் ஆளுநர் அமைச்சரை அழைத்து சில விளக்கங்களை கேட்டிருக்கிறார்கள் என்று நான் தெரிந்து கொண்டேன். அதற்கான விளக்கம் கிடைத்ததும் உடனே முடிவு எடுக்கலாம்.
ஒரு ஆளுநர் மசோதா வந்த உடனேயே கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்ற ஒன்று கிடையாது. அந்த மசோதாவில் சில சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் அதற்கான ஆலோசனையை கேட்பதற்கு நேரம் எடுத்து கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார்.