பஞ்சாபில் வானில் பறக்க ஆசைப்பட்டு விமான மாடல்களை உருவாக்கி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் விவசாயி

புதுடெல்லி: பஞ்சாபை சேர்ந்த விவசாயி யாவீந்தர் சிங் கோக்கர் (49) சொந்தமாக விமான மாதிரிகளை உருவாக்கி அது குறித்த தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார்.

பத்திண்டா மாவட்டம் துணைத் தாலுகா பக்த பாய் காவின் சிர்யே வாலா கிராமத்தைச் சேர்ந்த கோக்கர் கூறியதாவது.

சிறு வயதில் பறவை போல் பறக்க ஆசைப்பட்டேன். 1996-ல் படிப்பை முடித்து விவசாயத்தை கையில் எடுக்கும் போதும் அந்த ஆசை மனதில் எங்கோ ஒட்டிக் கொண்டிருந்தது. திருமண நிகழ்வுக்காக இங்கிலாந்து சென்ற போது அங்குள்ள கிளப்பில் விமான மாடல்களைக் கண்டேன். அங்கிருந்து 2 சிறிய ஏரோ மாடல் விமானங்களை இங்கு வரவழைத்துவிட்டேன். ஏரோ மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் ஏற்பட்டதால் இந்த விஷயம் குறித்து இணையதளத்தில் கூடுதல் தகவல்களை திரட்டினேன்.

பறக்கும் கோட்பாடு, எலக்ட்ரானிக் செட் அப், இன்ஜின் செட் அப், விமானங்கள் பறக்கும் விதம் என அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டு சொந்த ஏரோ மாடல்களை உருவாக்கி மாணவர்களுக்கும் அவற்றை கற்றுத்தர ஆரம்பித்தேன்.

இதற்காக, எனது நிலத்தில் ஒரு ஏக்கரில் விமான ஓடுதளம், பணிமனை, ஏரோமாடலிங் லேபரட்டரி ஆகியவற்றை உருவாக்கியுள்ளேன்.

அதிக அடர்த்தி நிறைந்த சிறப்பு தெர்மோகோலில் பெரிய ரக விமானங்களின் மாதிரிகளை உருவாக்கி வருகிறேன். அண்மையில் நான் உருவாக்கிய சி-130 ஹெர்குலிஸ் டிரான்ஸ்போர்ட் விமான மாடலை இந்தியாவில் கையால் உருவாக்கப்பட்ட பெரிய விமான மாடலாக 2022 ஆகஸ்டில் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.

விமான தொழில்நுட்பங்களை கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் வகையில் தற்போது, சண்டிகர் யுனிவர்சிட்டி, மகாராஜா ரஞ்சித் சிங் பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பத்திண்டா மற்றும் ஜிஎன்ஏ பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவுள்ளேன். பாதுகாப்பு படைக்காக சில திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.