டப்ளின்: அயர்லாந்தில் வேலையே கொடுக்காமல் ‘சும்மா’ வந்துசெல்ல ஆண்டுக்கு ரூ.1.03 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும் இதனால் தனக்கு மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை புலம்புவதையே பலரும் வாடிக்கையாக வைத்திருப்பர். எவ்வளவு வேலை செய்தாலும், சம்பளம் விஷயத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை திருப்திப்படுத்துவதில்லை. இது இப்படியிருக்க அயர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கு எந்த வேலையையும் செய்ய விடாமல் ‘சும்மாவே’ இருக்க வைத்து சம்பளம் கொடுத்திருக்கிறது அவர் பணியாற்றிய ரயில்வே நிர்வாகம். அதுவும் 1.03 கோடி ரூபாயை ‘சும்மா’ இருந்த நபருக்கு ஊதியமாக கொடுத்துள்ளது.
டெர்மோட் அலஸ்டைர் மில்ஸ் என்பவர் ஐரிஷ் ரயில் நிறுவனத்தில் பைனான்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். சுமார் 9 ஆண்டுகளாக இவர் காலை 10 மணிக்கு வேலைக்கு வந்துவிடுவாராம். செய்தித்தாள்களை படித்துவிட்டு, சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டு வேலையே இல்லாததால் வீட்டிற்கு சென்றுவிடுவாராம். இதற்காக ஓராண்டுக்கு அவருக்கு ரூ.1.03 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. வேலையையே கொடுக்காமல் தினமும் வந்து செல்வதால் தனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதாக மில்ஸ், நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இது தொடர்பாக மில்ஸ் கூறுகையில், ‘தினமும் அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கெல்லாம் சென்றுவிடுவேன். இரு செய்தித்தாள்களையும், சாண்ட்விச் வாங்கிக்கொண்டு அமருவேன். 10:30 மணி வரை செய்தித்தாளை படித்து, சாண்ட்விச் சாப்பிடுவேன். பிறகு எனது கம்ப்யூட்டரை ஆன் செய்து மெயில் வந்திருக்கிறதா என பார்த்து பதிலளிப்பேன். ஆனால் அந்த மெயிலில் வேலை நிமித்தமான எந்த தகவலும் இருக்காது. உடன் பணியாற்றுவோர் பற்றிய எந்த தகவலும் மெயிலில் வராது’ எனக் கூறியுள்ளார்.
இப்படியாக சும்மா அலுவலகத்துக்கு சென்று வர 9 ஆண்டுகளாக ஊதியமும் பெற்று வந்திருக்கிறார். இப்படியெல்லாம் நடக்க என்ன காரணம் என கேட்ட போது, கடந்த 2014ம் ஆண்டு தனது அலுவலகத்தில் நடந்த நிதி மோசடியை மில்ஸ் அம்பலப்படுத்தியதால் அவருக்கு கட்டாய விடுப்பு கொடுத்ததோடு, அவருக்கு எந்த வேலையும் கொடுக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள்.
இதனால் தன்னுடைய திறமைகள் எதுவும் பயன்படுத்தப்படாமல் மட்டுப்படுத்தப்படுவதாகவும், எந்த பதவி உயர்வும் கொடுக்காமல் வேலையில் வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டி மில்ஸ் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
இதனையடுத்து “அவர் வேலை செய்யாமல் இருப்பதற்காக மில்ஸை நாங்கள் தண்டிக்கவேயில்லை” என நிறுவனம் தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement