இந்தியா ஏவுகணை சோதனை நடத்துவதை ஒட்டி சீனா மீண்டும் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவின் ஏவுகணைகள் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சீனா கருதுகிறது. எனவே இந்தியா ஏவுகணை சோதனை நடத்தும் போதெல்லாம் சீனா உளவு பார்த்து வருகிறது. அண்மையில் இந்தியாவின் ஒவ்வொரு ராணுவ நிலைகளையும் சீனா உளவு பார்க்கத் தொடங்கி உள்ளது.
இதற்கு ஏற்ப சீனா சுமார் 12 அதிநவீன கப்பல்களை உருவாக்கி உள்ளது. அதில் சுமார் 20 ஆயிரம் டன் எடை கொண்ட யுவான் வாங்-5 என்ற உளவு கப்பல் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு வந்த இந்த உளவு கப்பல் தென் இந்தியாவின் முக்கிய ராணுவ பகுதிகளை உளவு பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு வாரம் இலங்கை துறைமுகத்தில் நின்ற அந்த கப்பல், பிறகு இந்திய பெருங்கடல் பகுதி வழியாக சீனாவுக்கு புறப்பட்டு சென்று விட்டது. இந்நிலையில் அடுத்த வாரம் இந்தியா அக்னி-5 ரக ஏவுகணை சோதனை நடத்துவதால் அந்த உளவு கப்பலை சீனா ராணுவம் மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. நேற்று காலை அந்த உளவு கப்பல் இந்தோனேஷியா அருகே உள்ள சந்தா ஜலசந்தியை கடந்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.
இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நாட்டிற்கு மிக நெருக்கமாக அந்த நவீன உளவு கப்பல் வந்து கொண்டிருக்கிறது. அக்னி-5 ஏவுகணை ஒடிசா கடலோரத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் போது அந்த ஏவுகணையை முழுமையாக ஆய்வு செய்ய சீன உளவு கப்பல் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அக்னி ஏவுகணைகளை இந்தியா எப்படி தயாரித்துள்ளது? அதன் வேகம் எப்படி உள்ளது? அதன் தாக்கும் சக்தி எப்படி உள்ளது? என்பன போன்றவற்றை கண்டுபிடிக்கும் வகையில் சீன உளவு கப்பலில் அதி நவீன கருவிகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
400 வீரர்களுடன் இயங்கும் அந்த கப்பலில் ஏவுகணைகளை பின் தொடர்ந்து செல்லும் வகையில் எலக்ட்ரானிக் ஆய்வு கருவிகள் உள்ளன. இதற்காகவே அந்த உளவு கப்பலில் 5 அதிநவீன தொலைநோக்கி கருவிகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அடுத்த வாரம் அக்னி ஏவுகணை விண்ணில் ஏவப்படும் பட்சத்தில் அதை முழுமையாக சீன உளவு கப்பலால் ஆய்வு செய்ய முடியும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் இந்தியா அக்னி-3 ரக ஏவுகணை சோதனையை நடத்த திட்மிட்டபோது சீனாவின் யுவான் வாங்-6 என்ற உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் ஊடுருவி தயாராக நின்றது. இதனால் இந்தியா அந்த ஏவுகணை சோதனையை ஒத்திவைத்தது. அதுபோல இந்த தடவையும் அக்னி-5 ஏவுகணை சோதனை ஒத்தி வைக்கப்படுமா? என்ற கேள்விகுறி எழுந்துள்ளது.
சர்வதேச கடல் பகுதிகளில் எல்லா நாடுகளும் சுதந்திரமாக செயல்பட அனுமதி உள்ளது. இதை பயன்படுத்தி தான் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் சீனா தனது உளவு கப்பல் மூலம் அத்துமீறுகிறது. சீன நீர்மூழ்கி கப்பல்களை தங்கு தடையின்றி இயக்குவதற்காகவே இத்தகைய உளவுப் பணிகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறது. அதற்கு இந்தியாவால் தடை போட முடியாது என்பதால்,பதிலடி கொடுப்பது கொடுப்பது எப்படி என்று இந்தியா தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
இந்தியா தனது பாதுகாப்புக்காக பல்வேறு அதி நவீன ஏவுகணைகளை உருவாக்கி இருக்கிறது. இதில் அக்னி ரக ஏவுகணைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அக்னி ரக ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு நிறுவனம் அடிக்கடி விண்ணில் செலுத்திஆய்வு செய்து வருகிறது.
கடந்த மாதம் 3 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்கும் அக்னி ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. அடுத்த கட்டமாக சுமார் 5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி-5 என்ற ஏவுகணையையும் இந்தியா ஆய்வு செய்து வருகிறது. அடுத்தவாரம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் அக்னி-5 ஏவுகணையை இந்தியா சோதிக்க திட்டமிட்டுள்ளது.
ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட உள்ளது. அக்னி-5 ரக ஏவுகணைகள் 3 அடுக்குகளை கொண்டது. இதனால் இதன் ஆற்றல் அதிகமாக இருக்கும். இந்த ரக ஏவுகணைகள் சீன நாட்டின் வடக்கு பகுதி வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. விரைவில் இந்த ஏவுகணையை முப்படைகளிலும் இணைக்க இந்தியா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
newstm.in