டெல்லி மதுபான கொள்கை வழக்கு: கேசிஆர் மகள் கவிதாவிடம் விசாரிக்க சிபிஐ முடிவு!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கே.கவிதாவிடம், வரும் 11 ஆம் தேதி விசாரணை நடத்த, சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, ஆட்சியிலும், கட்சியிலும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் இருப்பவர் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா.

இந்நிலையில், டெல்லியில் இருந்த பழைய மதுபானக் கொள்கைக்கு பதிலாக புதிய மதுபானக் கொள்கையை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அமல்படுத்தியது. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், சில மாதங்களுக்கு பிறகு, புதிய மதுபானக் கொள்கை பதிலுக்கு, பழைய மதுபானக் கொள்கை மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக, டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம், பாஜக புகார் அளித்தது. இதைத் தொடர்ந்து, இந்த புகார் குறித்து சிபிஐ விசாரிக்க அவர் உத்தரவிட்டார். இதற்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, டெல்லி புதிய மதுபானக் கொள்கை தொடர்பாக நடந்த பணப் பரிமாற்றத்தில், தெலங்கானா மாநில முதலமைச்சரும், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் மகளும், எம்எல்சியுமான கவிதா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்பி ஸ்ரீனிவாசலு ரெட்டி உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதை அடுத்து மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கே.கவிதாவுக்கு, கடந்த 2 ஆம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பியது. அதில், ‘உங்களிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. விசாரணைக்கான இடத்தை நீங்களே உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யலாம்’ என, சம்மனில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து, “ஐதராபாத்தில் உள்ள என் வீட்டிலேயே விசாரணை நடத்தலாம் என அதிகாரிகளிடம் கடிதம் மூலம் தெரிவித்து விட்டேன். எந்தவிதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயார்” என, கே.கவிதா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் வரும் 11 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள வீட்டில் கே.கவிதாவிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான சம்மனும் அவருக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.