தமிழ்நாடு அரசு பண்பாட்டு துறை சார்பில் ஓவிய-சிற்பக் கலைகாட்சிக்கு சிற்பங்களை அனுப்ப அழைப்பு…

சென்னை: தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான மரபுவழி/நவீனபாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட்சிகள் ஓவியம் மற்றும் சிற்பங்களை அனுப்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கலை பண்பாட்டுத்துறை நுண்கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான மரபுவழி/நவீனபாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதில் சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கலைஞர்களை ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் 2022-23ஆம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சி நடத்தி, ஓவியக்கலை பிரிவில் (மரபு வழி / நவீனபாணி) சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 30 வயதுக்கு மேற்பட்ட 15 மூத்தக் கலைஞர்களுக்கு தலா ரூ.15,000, 30 வயதுக்கு உட்பட்ட 10 இளங்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட உள்ளது.

அதேபோல் சிற்பக்கலை பிரிவில் (மரபுவழி / நவீனபாணி) சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 30 வயதுக்கு மேற்பட்ட 15 மூத்தக் கலைஞர்களுக்கு தலா ரூ.15,000, 30 வயதுக் குட்பட்ட 10 இளங்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.

2022-23ஆம் ஆண்டில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சியை நடத்திட ஏதுவாக, முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்கள் பின்வரும் விதிமுறைகளின்படி வரவேற்கப்படுகின்றன.

ஓவிய, சிற்பக் கலைக்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் (பெயர், பிறந்த தேதி, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், படைப்பின் தலைப்பு, படைப்பின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன்) ஓவியங்கள்/ சிற்பங்களின் (10 x 12 Size) இரண்டு புகைப்படங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

கலைஞர்கள் மரபுவழிப் பிரிவிலோ அல்லது நவீனபாணி பிரிவிலோ என ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.

கலை பண்பாட்டுத்துறையின் மூலமாக கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், கடந்த ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்தோர் இதன் கீழ் விண்ணப்பிக்கக் கூடாது.

ஓவியர்கள் மற்றும் சிற்பிகளிடமிருந்து பெறப்படும் புகைப்படங்களில் இருந்து, கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தெரிவுக்குழுவின் மூலம் சிறந்த புகைப்படங்கள் மாநில அளவிலான ஓவிய-சிற்ப கலைக்காட்சிக்கு தெரிவு செய்யப்பட்டு, தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் உரிய விவரங்கள் இந்த அலுவலகத்தினால் தெரிவிக்கப்படும்.

அதன் பின்னர் ஓவியப் படைப்புகளும், சிற்பங்களும் பெறப்பட்டு கலைக்காட்சியில் வைக்கப்படும். கலைக்காட்சிக்கு வைக்கப்படும் அசல் ஓவிய, சிற்ப படைப்புகளில் சிறந்த கலைப்படைப்புகள் தெரிவுக்குழுவால் பரிசுக்கு தேர்வு செய்யப்படும்.

மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் உரிய தன் விவரக்குறிப்புடன் ஓவியங்களின்/சிற்பங்களின் புகைப்படங்களை பின்வரும் முகவரிக்கு டிசம்பர் 23க்குள் அனுப்பி வைக்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.