திருப்பூர் மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி பாறைக்குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி முத்துராஜ் (31). இவர் சுண்டமேடு பகுதியில் உள்ள பாறைக்குழுக்கி மீன் பிடிக்க சென்றுள்ளார். இந்நிலையில் முத்துராஜ் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாறைக்குழிக்குள் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து வெகு நேரமாகியும் முத்துராஜ் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் முத்துராஜை தேடி சென்றுள்ளனர். அப்பொழுது பாறைக்குழிக்குள் ஒரு ஆண் உடல் கிடந்துள்ளது. இதைத்தொடர்ந்து இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாறைக்குழைக்குள் இறங்கி முத்துராஜின் உடலை மீட்டனர். பின்பு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.