திருவண்ணாமலை தீபத் திருவிழா: 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வரின் உத்தரவின்படி, 2022- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5-ம் தேதியிலிருந்து வரும் 7-ம் தேதி வரை 2,700 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை திருக்கோயிலில் இன்று (டிச.6) கார்த்திகை மகா தீபத்திருவிழா மற்றும் நாளை (டிச.7) பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளுவதால், அவர்களின் பேருந்து தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில், கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலைக்கு பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பயணிகள் அடர்வு குறையும் வரை, தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்கிட ஏற்பாடு செய்திடவும், இப்பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும், உரிய அலுவலர்கள் பணியமர்தப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையின்படி, சம்மந்தப்பட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். மேலும், சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் இன்றியும், பொதுமக்கள் சிரமமின்றியும் பயணம் செய்திட ஏதுவாக, அரசுப் பேருந்துகளை இயக்கிட ஆவன செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.