திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் இன்று (6-ம் தேதி) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டன. அரோகரா முழக்கமிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
“நினைத்தாலே முக்தி தரும்” திருத்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த நவம்பர் 24-ம் தேதி தொடங்கியது. பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது. அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் நவம்பர் 27-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெற்றன. இதில் மகா தேரோட்டம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று (6-ம் தேதி) ஏற்றப்பட்டன. மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. ஏகன் – அநேகன் நானே என்பதை எடுத்துரைக்கும் வகையில், மூலவர் சன்னதியில் அதிகாலை 3.40 மணியளவில் பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பின்னர், பரணி தீபத்தை பக்தர்கள் தரிசித்தனர். இதன்பிறகு, கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றன.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுத்தல்: இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அனைவரும் ஒவ்வொருவராக, மகா தீப தரிசன மண்டபத்தில் இன்று (6-ம் தேதி) மாலை எழுந்தருளினர். பின்னர், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும், அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்கும் நிகழ்வு மாலை 5.50மணியளவில் நடைபெற்றது. உமையவளுக்கு இடபாகத்தை அளித்து ஆண்-பெண் சமம் என்ற தத்துத்தை உலகுக்கு எடுத்துரைத்து ஆனந்தமாக அடியவாறு அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுத்தார். தங்க கொடி மரம் வழியாக வெளியே வந்து காட்சி கொடுத்துவிட்டு சென்ற அர்த்தநாரீஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுத்த நிகழ்வு நிறைவு பெற்றதும், தங்க கொடி மரம் உள்ள அகண்டத்தில் தீப சுடர் ஏற்றப்பட்டும், 2,668 அடி உயரம் உள்ள ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை மாலை 6 மணியளவில் பருவதராஜ குல வம்சத்தினர் ஏற்றி வைத்தனர். அப்போது விண் அதிரும் வகையில் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கமிட்டனர். ஜோதி வடிவமாக இறைவன் காட்சி கொடுப்பதால், அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னதியின் நடை அடைக்கப்பட்டன. மகா தீபம் ஏற்றப்பட்டதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அண்ணாமலையார் கோயில் ஜோலித்தன. இதேபோல், திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்று பகுதி கிராமங்களில் மின் விளக்குகள் எரிய தொடங்கின. வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். மகா தீபத்தை மலை மீது ஏறி சென்று தரிசிக்க சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

11 நாட்களுக்கு தீப தரிசனம்: விண்ணை நோக்கி வாண வேடிக்கைகள் விடப்பட்டும், பட்டாசு வெடித்தும் அண்ணாமலையாரின் பூமி விழா கோலம் பூண்டிருந்தன. விரதம் இருந்த பல பக்தர்கள் தினை மாவு உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்தனர். மகா தீப தரிசனத்தை தொடர்ந்து 11 நாட்கள் காணலாம். ஜோதி வடிவமாக காட்சி கொடுத்த அண்ணாமலையாரை குளிர்விக்க ஐயங்குளத்தில் நாளை (டிசம்பர் 7-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளன. உண்ணாமுலை அம்மன் சதேம அண்ணாமலையாரின் கிரிவலம் 8-ம் தேதி நடைபெற உள்ளன. 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகைத் தீபத் திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் வரும் 10-ம் தேதி நிறைவு பெற உள்ளன. கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் தீப மை, ஆரூத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு சாத்தப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்று வழிபட்டனர்.
விடிய விடிய கிரிவலம்: கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி இன்று (6-ம் தேதி) அதிகாலை 2 மணியில் இருந்து பக்தர்கள், கிரிவலம் செல்ல தொடங்கினர். 14 கி.மீ., தொலைவு உள்ள அண்ணாமலையை ‘ஓம் நமசிவாய’ என முழங்கியபடி கிரிவலம் வந்து வழிபட்டனர்.
மெள்ள மெள்ள அதிகரிக்க தொடங்கிய பக்தர்களின் வருகையானது, பிற்பகல் 3 மணிக்கு பிறகு கிடுகிடுவென அதிகரித்தது. விடிய விடிய பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கார்த்திகைத் தீபத் திருவிழாவை தொடர்ந்து பவுர்ணமி நாளை(7-ம் தேதி) உள்ளதால், பக்தர்களின் கிரிவலம் 2-வது நாளாக இன்றும் தொடர உள்ளன. பக்தர்களுக்காக 2,700 சிறப்பு பேருந்துகள், 63 ரயில்கள் 8-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பார்க்க > கார்த்திகை தீபத் திருவிழா | திருவண்ணாமலையில் மகா தீபம் – புகைப்படத் தொகுப்பு