பேருந்து பயணியிடம் இருந்து செல்போனை திருடிக்கொண்டு ஓடிய வட மாநில இளைஞரை விரட்டிப் பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை, அவருடைய உயர் அதிகாரிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள். தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ், காளீஸ்வரிக்கு சால்வை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார். தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் காளீஸ்வரியிடம் பேசினோம்…
“நேற்று முன்தினம் தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். அது மாலை நேரம் என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. அந்தப் பேருந்து நிலையத்தில் செல்போன் காணாமல் போவது அடிக்கடி நிகழும். அங்குதான் எனக்கு ஈவினிங் ஷிஃப்ட் டியூட்டி. காஸ்ட்லியான செல்போனை தொலைத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கண்ணீரும் கம்பலையுமாக வருகிற பலரை பார்த்திருப்பதால், ரொம்பவே கவனமாக இருப்பேன். அன்றும் அப்படித்தான் இருந்தேன்.

ஓர் இளைஞன், கூட்டம் அதிகமாக இருந்த பேருந்து ஒன்றுக்குள் ஏறி, சிறிது நேரத்துக்குள் கீழே இறங்கினான். அப்படி இறங்கும்போது, அவன் பாக்கெட்டுக்குள் போனை வைத்தபடியே இறங்கினான். நான் அவனையும் கவனித்தேன்; அவன் செல்போன் வைப்பதையும் பார்த்துவிட்டேன். நான் அவனைப் பார்த்ததை அவனும் பார்த்து விட்டான். உடனே பேருந்தின் பின்பக்கமாக போக ஆரம்பித்தான். நான் அவனை பின்தொடர ஆரம்பித்தேன். ‘நான் அவனைப் பின்தொடர்ந்து வருகிறேனா’ என்று பார்ப்பதற்காக எட்டிப் பார்த்தான். நான் பின்தொடர்வது தெரிந்ததும் ஓட ஆரம்பித்தான். அவன் செல்போன் திருடிக்கொண்டு ஓடுகிறான் என்பது உறுதியாகிவிட்டதால், நான் விரட்ட ஆரம்பித்தேன். சப்வேயில் இறங்கி, ஏறி, கூட்டம் அதிகமான ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஓடி… என போக்குக் காட்டினான். இறுதியில் கையெட்டும் தூரத்தில் சிக்கினான்; பிடித்துவிட்டேன். அடுத்தவர் உழைப்பைத் திருடுவதை அனுமதிக்கவே முடியாது” என்கிறார் காவலர் காளீஸ்வரி அழுத்தம்திருத்தமாக.