லாலு மகள் ரோஹிணிக்கு குவியும் பாராட்டு| Dinamalar

புதுடில்லி: பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக தானம் செய்த அவரது மகள் ரோஹிணிக்கு, பா.ஜ., தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மாட்டு தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தேசிய தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 74, உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்தனர். மருத்துவ காரணங்களுக்காக நீதிமன்றம், ‘ஜாமின்’ அளித்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக லாலு ஆசிய நாடான சிங்கப்பூர் சென்றார்.

அங்கு, தன் இளைய மகள் ரோஹிணி ஆச்சார்யாவுடன் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். லாலுவுக்கு அவர் தன் சிறுநீரகத்தை தானமாக தர முன்வந்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; தந்தையும், மகளும் நலமாக உள்ளனர்.

இந்நிலையில், லாலு மகள் ரோஹிணிக்கு பா.ஜ., தலைவர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

லாலுவை எப்போதும் கடுமையாக விமர்சிப்பவரும், பீஹாரைச் சேர்ந்த மூத்த பா.ஜ., தலைவருமான கிரிராஜ் சிங் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தி:

ரோஹிணி ஆச்சார்யா மிகச்சிறந்த மகளாக உள்ளார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தன் செயலால், வருங்கால சந்ததியினருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ., – எம்.பி., நிஷிகாந்த் துபே கூறுகையில், ”எனக்கு மகள் இல்லை. ரோஹிணி ஆச்சார்யாவை இன்றைக்கு பார்க்கும்போது, எனக்கு ஏன்மகள் பிறக்கவில்லை என கடவுளிடம் சண்டை போட தோன்றுகிறது,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.