இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணி கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் போன்ற பணிகளுக்காக கடந்த மாதம் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாம் மூலம் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக மட்டும் கடந்த 1ம் தேதி வரை தமிழக முழுவதும் சுமார் 18 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வருகிற 8ம் தேதி கடைசி நாள் என்பதால் இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டுமே கால அவகாசம் உள்ளது.
இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 26 ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து திருத்தம் மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஜனவரி 3ஆம் தேதி வரை அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 5ஆம் தேதி தமிழக முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனினும் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதனமான www.nvsp.in என்ற இணையதளம் மூலம் தொடர்ந்து திருத்தங்களை செய்யலாம் எனவும், அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு பரிசீலனைக்கு எடுத்த கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.