டிரானா:அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அல்பேனியாவின் ‘மாஜி’ அதிபர் முகத்தில் குத்தி காயமேற்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் அதிபராக 1992 – 1997 வரை பதவி வகித்தவர் சாலி பெரிஷா, 78. இங்கு, ஜனநாயக கட்சியின் தலைவராக உள்ள இவர், தற்போதைய அதிபர் எடி ரமா மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
மேலும், ‘எடி ரமா பதவி விலக வேண்டும்; முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும்’ எனக்கோரி, தன் கட்சியினருடன் தலைநகர் டிரானாவில் நேற்று பேரணி நடத்தினார்.
அப்போது, திடீரென பேரணிக்குள் புகுந்த 30 வயது இளைஞர் ஒருவர், சாலி பெரிஷாவின் இடது கண் அருகே ஓங்கி ஒரு குத்து விட்டார்.
நிலைகுலைந்த பெரிஷா சரிந்து விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது கட்சி நிர்வாகிகள், தங்கள் தலைவரை அடித்த இளைஞரைப் பிடித்து நையப்புடைத்தனர்.
அங்கு காவலுக்கு வந்திருந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு அழைத்துச் சென்றனர். ‘அவர் மனநலம் பாதிக்கப் பட்டவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என போலீசார் கூறினர்.
ஆனால், ‘இது அரசே துாண்டி விட்ட அநாகரிகச் செயல்’ என ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இளைஞர் ஆவேசமாக குத்தியதில் இடது கண்ணுக்கு கீழ் காயம் அடைந்த பெரிஷா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement