ஆம்பூர் அருகே அதிகாலை மணல் மாட்டுவண்டி மீது லாரி மோதி மாடு பலி: போலீசுக்கு பயந்து உடனடி அகற்றம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே அதிகாலை மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு இறந்தது. போலீசாருக்கு பயந்து உடனடியாக மாட்டை அப்புறப்படுத்திக்கொண்டு காயமடைந்தவர்கள் தப்பியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் இரவு, பகல் பாராமல் மணல் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனை தடுக்க எஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் அருகே பாலாற்றில் இருந்து இன்று அதிகாலை மாட்டுவண்டியில் ஒரு கும்பல் மணல் கடத்தியுள்ளது.

அங்குள்ள வீரகோயில் பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையை மாட்டுவண்டிகள் கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து ஒரு மாட்டு வண்டி மீது மோதியது. இதில் அந்த மாட்டு வண்டியை ஓட்டிவந்த நபர் மற்றும் மாடுகள் காயமடைந்தன. சிறிதுநேரத்தில் காயமடைந்த ஒரு மாடு இறந்தது. இதனால் உடன் வந்த மற்ற மாட்டு வண்டிக்காரர்கள் போலீசாருக்கு பயந்து இறந்த மாட்டை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு காயமடைந்த மாட்டு வண்டி ஓட்டி வந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார், விபத்து நடந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர். முன்னதாக மாட்டு வண்டி மீது மோதிய லாரியும், விபத்து நடந்த உடன் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.