புதுடில்லி,:புதுடில்லியில், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கவைத்து விடுவதாக மிரட்டி, இளம் தொழில் அதிபரிடம் இருந்து 80லட்சம் ரூபாயை பறித்த, பிரபல பெண் ‘யு டியூபரை’ போலீசார் நேற்று கைது செய்து, அவரது கணவரை தேடி வருகின்றனர்.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரபல யு டியூபராக இருக்கும் நம்ரா காதிரை, 22, லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இவரது கணவர் விராட் பெனிவால்.
இந்நிலையில், புதுடில்லியில் விளம்பர நிறுவனம் நடத்தி வரும் தினேஷ் யாதவ், ௨௧, என்ற தொழில் அதிபருடன், நம்ராவுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் யு டியூபில் விளம்பரம் செய்வது குறித்து ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
நம்ரா காதிருக்கு இரண்டு தவணையாக ௨ லட்சத்து ௫௦ ஆயிரம் ரூபாய் தினேஷ் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, தினேசை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக நம்ரா தெரிவித்துள்ளார். இதற்கு தினேசும் சரி என கூறியுள்ளார். பின் இருவரும் சேர்ந்து மது அருந்திய பின், இரவில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
மறுநாள் காலையில் தினேஷ் எழுந்தவுடன், அவரிடம் நம்ரா லட்சக்கணக்கில் பணம் கேட்டுள்ளார். ஆனால், தினேஷ் தர மறுத்துஉள்ளார்.
இதையடுத்து, நம்ராவும், விராட்டும் சேர்ந்து, பாலியல் வழக்கில் சிக்க வைத்து விடுவதாக, அவரை மிரட்டியுள்ளனர். இதில் பயந்த தினேஷ், இதுவரை ௮௦ லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில், இது குறித்து, தினேஷ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, நம்ரா காதிரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தலைமறைவான விராட் பெனிவாலை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்