புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் தவறானவை என்பது நாளை நிரூபணமாகும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (டிச.7) எண்ணப்பட்டன. ஆம் ஆத்மி அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சி, தற்போது ஆம் ஆத்மி வசமாகியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “டெல்லியில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர் அரவிந்த் கேஜ்ரிவால். அதேபோல், கடந்த 15 ஆண்டு காலமாக பாஜக கட்டுப்பாட்டில் இருந்த டெல்லி மாநகராட்சியை மீட்டு, அதற்கும் முடிவு கட்டி உள்ளார்.
வெறுப்பு அரசியலை மக்கள் விரும்பவில்லை. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்பாடு, கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு, தூய்மை ஆகியவற்றையே மக்கள் விரும்புகிறார்கள். டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றி இருப்பதன் மூலம் இனி இந்த மாநகராட்சி தூய்மையான மாநகராட்சியாக மாறும்.
ஆம் ஆத்மி கட்சியை தடுத்து நிறுத்த பாஜக விரும்பியது. அதன் காரணமாகவே தனது முழு சக்தியையும் அது களமிறக்கியது. நாளை குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாளையும் நான் உங்களை (பத்திரிகையாளர்களை) சந்திப்பேன். முடிவுகள் ஆச்சரியம் தரக்கூடியவையாக இருக்கும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறு என்பது நாளை நிரூபணமாகும்” என்று அவர் தெரிவித்தார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது இடத்தை காங்கிரஸ் கட்சியும், மூன்றாவது இடத்தை ஆம் ஆத்மி கட்சியும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இவ்வாறு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.