குளிர்கால கூட்டத்தொடர்: மோடி பேச்சும், காத்திருக்கும் மசோதாக்களும்!

நடப்பாண்டின் கடைசி கூட்டத்தொடர். அதாவது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. வரும் டிசம்பர் 29ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறவுள்ளன. தற்போது பண வீக்கம் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பதால், இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் முக்கியமான ஒன்றாக நாடாளுமன்றத்தில் எழுப்பக்கூடும்.

16 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

இந்நிலையில் 16 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு முன்பு, நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி, இன்று குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள். அனைத்து அரசியல் கட்சிகளும் முதல்முறை எம்.பியாக பதவியேற்று வந்திருப்பவர்களை விவாதங்களில் பங்கேற்கும் வகையில் வாய்ப்பளிக்க வேண்டும்.

விரைவில் ஜி-20 மாநாடு

ஜனநாயகத்தை பலப்படுத்த அடுத்த தலைமுறையை தயார்படுத்துங்கள். ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுக்க அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பேசுகையில், ஜி-20 மாநாட்டை நடத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடிய சூழலில் நாம் இங்கே சந்திக்க வந்துள்ளோம். இது சர்வதேச அரங்கில் இந்தியாவின் வல்லமையை காட்டக்கூடிய அருமையான வாய்ப்பு என்றார்.

மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்

இதையடுத்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதலில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் முன்னாள் எம்.பிக்கள் 8 பேரின் மறைவிற்கு அவையிலுள்ள உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து கூட்டத்தில் மாநிலங்களவை தலைவராக பதவியேற்றுக் கொண்ட துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ஜகதீப் தங்கருக்கு வாழ்த்து

அவையில் பேசுகையில், சட்டத் துறையிலும், ஆளுநராகவும் நீங்கள் பெற்றுள்ள பணி அனுபவம் இந்த அவையை திறம்பட நடத்த உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். நமது குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்தவர். அவருக்கு முந்தைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்தவர். அந்த வரிசையில் நமது துணை குடியரசு தலைவர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்.

அவை ஒத்திவைப்பு

சைனிக் பள்ளியில் படித்தவர். எனவே ராணுவ வீரர்களுடனும், விவசாயிகளுடனும் நெருக்கமாக பழகியவர் எனப் பாராட்டினார். தொலைநோக்கு பார்வையில் சிறப்பான வளர்ச்சியை அடைவதற்கு ஊன்றுகோலாக இந்த நாடாளுமன்றம் திகழ்கிறது. நமது நாட்டின் மிகப்பெரிய பலமே மாநிலங்களவை தான். முன்னாள் பிரதமர்கள் பலரும் இதன் உறுப்பினர்களாக இருந்ததாக குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பாக நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை அடைந்த ஜகதீப் தங்கருக்கு எனது வாழ்த்துகள். இன்றைய தினம் மாநிலங்களவை தலைவராக உங்களை வரவேற்க சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனப் பேசினார். பின்னர் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.