புதுடெல்லி: “2021-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 14 பேர் பலியாகினர்; 1,119 பேர் காயமடைந்தனர். ஒரு காளை பலியானது; 8 காளைகள் காயம் அடைந்தன. 2022-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 17 பேர் பலியாகினர்; 1,655 பேர் காயமடைந்தனர். 2 காளைகள் பலியாகின” என்று உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.
ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஆறாவது நாளாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, “ஜல்லிக்கட்டு என்பது எங்களது அடிப்படை உரிமை. எங்களது கலாச்சாரமாகும். இது அத்தியாவசம் அல்லது அத்தியாவசமில்லை என்று நீதிமன்றம் எப்படி கூற முடியும்? இது கலாச்சாரம், பண்பாடு அல்லது மாதம் சார்ந்த விஷயமாக உள்ளது. இதில் நீதிமன்றம் எவ்வாறு முடிவு செய்ய முடியும்? அவ்வாறு முடிவு செய்ய நீதிமன்றம் என்ன நடுவரா?” என கேள்விகளை எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது மனிதர்களின் நன்மைக்கானதாக இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு தரப்பில், “நிச்சயமாக, ஏனெனில் கலாச்சாரம், பண்பாடு என்பது மனிதனின் நன்மைக்கானது தானே. ஒரு விலங்கை பழக்கப்படுத்தும்போது உணவளித்தல் மற்றும் குச்சியை வைத்து மிரட்டி பழக்குதல் என்ற அடிப்படைதான் கடைபிடிக்கப்படுகிறது. அது நாய், குதிரை என எந்த விலங்காக இருந்தாலும் இதே நடைமுறைதான். இந்த நடைமுறைகளை கடைபிடித்தால்தான் விலங்குகள் உரிமையாளரின் கட்டளைக்கு பழக்கப்பட்டு பணிந்து வரும். ஒரு விலங்கை வீட்டு விலங்காக பழக்கப்படுத்த சில கடினமான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டி வரும். இது கடந்த 5000 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “அப்படியெனில் விலங்குகளை பழக்கும்போது இதுபோன்ற சில கடினமான நடைமுறைகள் தவிர்க்க முடியாது என கூறுகிறீர்களா? எனவே “தேவை இல்லாத ஒன்று” என்ற வார்த்தைக்கு பதில் “தவிர்க்க முடியாதது” என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளலாமா? என கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசுத் தரப்பில், “நிச்சயமாக தவிர்க்க முடியாதது என்பதையே இந்த இடத்தில் பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது மனிதர்கள் உயிரிழக்கின்றனர் என எதிர் தரப்பு குற்றம்சாட்டுகின்றனரே?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு தரப்பில், “எல்லா வேலைகளிலும் உயிரிழப்பு என்பது ஏற்படுகிறது.வாகனம் ஓட்டும்போது விபத்து நிகழ்கிறது. பாலம் உடைந்து உயுரிழப்பு ஏற்படுகிறது. இப்படி பல உதாரணங்கள் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது, பீட்டா அமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியாம் திவான், “காளைகள் துன்புறுத்தல், ஜல்லிக்கட்டில் மனிதர்கள் உயிரிழந்தது உள்ளிட்டவை தொடர்பாக ஆதாரப்பூர்வ ஆவணங்கள் இல்லை என தமிழக அரசு கூறுவது தவறானது. பல்வேறு ஆய்வுகள் அடிப்படையிலான தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
2017-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளனர், 2000 பேர் காயம் அடைந்துள்ளனர். 5 களைகள் உயிரிழந்துள்ளன. 7 காளை காயம் அடைந்துள்ளன. 2018-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 757 பேர் காயம் அடைந்துள்ளனர். 5 காளைகள் உயிரிழந்துள்ளன. 2019-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 597 பேர் காயம் அடைந்துள்ளனர். 5 காளைகள் மற்றும் ஒரு பசு பலியாகியுள்ளன. 2020-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 18 பேர் பலியாகியுள்ளனர், 570 பேர் காயமடைந்துள்ளனர். 6 காளைகள் பலியாகியுள்ளன.
2021-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 14 பேர் பலியாகி உள்ளனர், 1,119 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு காளை பலியாகி உள்ளது, 8 காளைகள் காயம் அடைந்துள்ளன. 2022-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 17 பேர் பலியாகி உள்ளனர், 1,655 பேர் காயமடைந்துள்ளனர். 2 காளைகள் பலியாகி உள்ளன. இதை தவிர ஜல்லிக்கட்டை பார்க்க வந்த கூட்டத்துக்குள் காளைகள் பாய்ந்ததில் சில உயிர் பலி ஏற்பட்டுள்ளது. காளைகளை பழக்குபவரும் உயிரிழந்துள்ளார். இவை அனைத்தும் பல்வேறு செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ளன. ஆனால் தமிழக அரசு எந்த விதிமுறை மீறலும் இல்லை எனக் கூறுகிறது.
மேலும், விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது தமிழக அரசின் சட்ட விதிகளில் இல்லை. மேலும் காளைகள் மீது பலர் ஒரே சமயத்தில் தாவுகின்றனர், அதனால் காளைகள் பீதியடைந்து தாக்குகிறது. எனவே விதிகள் வகுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறுவது கண்துடைப்பு. விதிகள் எந்த வகையிலும் அமல்படுத்தப்படவில்லை. எனவே தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியது அனைத்தும் தவறானது உண்மைக்கு புறம்பானது” என்று வாதிட்டார். இதையடுத்து விசாரணை நாளைய தினத்துக்கு (டிச.8) ஒத்திவைக்கப்பட்டது.