புதுடெல்லி: குஜராத், இமாச்சல பிரதேசம், டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் பேச்சில் அனல் பறந்தது. ஏவுகணைகளுக்கு இணையாக விமர்சன கணைகள் சீறிப் பாய்ந்தன. தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகும் சமூக வலைதள விமர்சனங்கள் இன்னமும் ஓயவில்லை.
இந்த சூழலில் ஜி-20 மாநாடுகளை நடத்துவது தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் தேநீர் விருந்து அளித்தார்.
இந்த தேநீர் விருந்தில் அரசியல்பகை, முரண்களை மறந்து அனைத்து கட்சிகளின் தலைவர்களும் நட்புடன் கலந்துரையாடினர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் மிகுந்த நட்பு பாராட்டினார். தேநீர் விருந்து நடைபெற்ற அரங்கம் முழுவதும் சிரிப்பலை எதிரொலித்தது.
பிரதமரின் நகைச்சுவையால் எதிர்க்கட்சித் தலைவர்கள் மனம்விட்டு சிரித்தனர். பிரதமருடன் பரஸ்பரம் கைகோத்து நட்பு பாராட்டினர். ஆரத் தழுவி அன்பை வெளிப்படுத்தினர். இந்த புகைப்படங்களை பிரதமர் மோடி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவை சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலுவுடன் பிரதமர் மோடி புன்சிரிப்புடன் பேசும் புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
முன்னாள் பிரதமர் தேவ கவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி நட்புடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
அரசியல் வேறு, நட்பு வேறு என்பதை இந்த புகைப்படங்கள் அழுத்தம், திருத்தமாக உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.