தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியிலிருக்கும் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் மலைக் கோயிலில் கார்த்திகை தீப திருநாள் விழா நடந்தது. இந்த விழாவில் ஓ.பி.எஸ்-ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடக்கவிருந்ததாகக் கூறி தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அரைமணி நேரத்துக்கு மேலாக தீபம் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், தீபம் ஏற்றுவதில் தி.மு.க-வினர் இடையூறு செய்ததாகக் குற்றம்சாட்டி ஓ.பி.எஸ் இளைய மகன் ஜெயபிரதீப் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், “சிவதொண்டராக நானும், என்னுடைய தந்தை ஓ.பன்னீர்செல்வமும் கைலாசநாதர் கோயிலில் பணி செய்து வருகிறோம். கடந்த 14 ஆண்டுகளாக ஆகமவிதிப்படி திருக்கார்த்திகை தீபத் திருநாள் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தீபத் திருநாள் விழா கொண்டாடுவது தொடர்பாக கோயில் செயல் அலுவலர் எங்களுக்கு எந்தவித ஆலோசனையும் வழங்கவில்லை. மேலும் விதிப்படி பத்திரிகையும் அச்சடிக்கவில்லை, மாறாக கோயில் அன்பர் பணிக் குழு சார்பில் விதிப்படி அச்சிடப்பட்ட பத்திரிகைகளையும் விநியோகிக்க விடாமல் தடுத்த செயல் அலுவலர், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை பெரியகுளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஏற்ற வேண்டும் எனக் கூறினார். அதற்கு அன்பர் பணிக் குழு மறுப்பு தெரிவித்து கோயில் அர்ச்சகர் ஏற்றட்டும் என்றனர்.
இதனால் ஆத்திரத்தில் நேற்று நடைபெற்ற தீபத் திருவிழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் மற்றும் தி.மு.க மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர் 150 ரௌடிகளுடன் இடையூறு ஏற்படுத்துவதற்காக வந்தனர். மேலும் கோயில் சார்பில் அவர்களுக்கு பரிவட்டம் கட்டுவதற்கு அழைப்பு விடுத்தும் வர மறுத்தனர். பின்னர் ஆகம விதிப்படி அம்மன் மற்றும் சுவாமி சன்னிதியில் ஆராதனை காட்டப்பட்ட அகல் விளக்கு மற்றும் உற்சவருடன் வந்துதான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை எதிர்த்து, செயல் அலுவலரை தீபம் ஏற்ற தி.மு.க-வினர் நிர்பந்தம் செய்தனர். இதனிடையே சுவாமி அருளால் சன்னிதியில் காட்டப்பட்ட அகல் விளக்கு மூலமே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. எனவே கார்த்திகை தீபம் ஏற்றுவதில் இடையூறு செய்த தி.மு.க-வினரை வன்மையாக கண்டிக்கிறேன். உண்மை நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே தேனி மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு சென்ற தி.மு.க மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், சரவணக்குமார் உள்ளிட்ட தி.மு.க-வினர், அறநிலையத்துறை கட்டுபாட்டிலிருக்கும் கோயில் விழாவில் தனிநபர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனப் புகார் அளித்திருக்கின்றனர்.