புதுடெல்லி: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியது: குஜராத் தேர்தல் தொடர்பாக வெளியான கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும், இதுபோன்ற கருத்து கணிப்புகள் சில நேரங்களில் முற்றிலும் தவறான வரலாறுகளையும் நாம் கண்கூடாக பார்த்ததுண்டு.
குஜராத் தேர்தலில் பாஜக பண பலத்தையும், அதிகார பலத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஊடகங்கள் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள் உண்மையாகும்பட்சத்தில், அது பாஜகவின் பிரிவினைவாத பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களை தவிர்த்து டெல்லி மாநகராட்சி தேர்தலில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என ஊடகங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: தேர்தல் முடிவுகள் எங்களுக்கே சாதகமாக இருக்கும். 100 இடங்களிலாவது ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும். பாஜக வலுவாக காலூன்றியுள்ள மாநிலத்தில் புதிய கட்சியொன்று 15-20 சதவீத ஓட்டுகளைப் பெறுவது என்பது எளிதான விஷயமல்ல. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை பொறுத்திருப்போம். ஆம் ஆத்மி கட்சியின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து வாக்களித்த டெல்லி மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.