நடமாடும் சொகுசு ஓட்டலில் முதல்வர்; விடியலுக்காக தென்காசி வெயிட்டிங்!

தமிழ்நாடு முதல்வர்

தென்காசியில் நாளை நடக்க இருக்கும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார்.

இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து இன்று மாலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசிக்கு புறப்பட்டார். நாளை காலை 7.30 மணிக்கு தென்காசி ரயில் நிலையம் வந்து அடைகிறார்.

இதன் பிறகு அங்கிருந்து குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவுக்கு பின்னர் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடக்க உள்ள இடத்திற்கு புறப்படுகிறார்.

அங்கு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு முடிவு பெற்றுள்ள பல்வேறு பணிகளையு தொடங்கி வைத்து மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில் சுமார் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடையநல்லூர் வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நாளை முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, தென்காசி ரயில் நிலையம் தொடங்கி குற்றாலம் விருந்தினர் மாளிகை வரை மற்றும் விழா மேடைக்கு செல்லும் வழி, அதன் பின்னர் விழா முடிந்ததும் ராஜபாளையம் செல்லும் வழி நெடுகிலும் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதனையொட்டி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மேற்பார்வையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் கொடி தோரணம் அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. சுவர் விளம்பரங்கள், கலை நிகழ்ச்சிகள் என தென்காசி நகர் பகுதி களைகட்டி காணப்படுகிறது.

இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்க கலெக்டர் ஆகாஷ் மேற்பார்வையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மண்டல ஜஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் ரயில் நிலையம் முதல் குற்றாலம், விழா மேடை மற்றும் மாவட்ட எல்லை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்.

முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணத்திற்காக பொதிகை ரயிலில் சொகுசு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் சொகுசு ஓட்டலில் உள்ளதை போல் பல்வேறு வசதிகள் உள்ளது.

இந்திய ரயில்வே நிர்வாகத்தின் ஐஆர்சிடிசி நிர்வாகம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர், முதலமைச்சர்கள் போன்ற உயர் பதவியில் உள்ளவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக ‘சலூன்’ என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.