வாஷிங்டன்: நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவை மிக அருகில் புகைப்படங்கள் எடுத்த நிலையில் மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளது.
புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பைக் காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்திருந்தது. அதன்படி ஆகஸ்ட் மாதமே ஆர்ட்டெமிஸ் 1 ஓரியன் விண்கலத்தை விண்ணில் செலுத்த நாசா தயாராகி இருந்தது .எனினும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன்பின், கடந்த மாதம் நிலவுக்கு ஆர்ட்டெமிஸ் 1 ஓரியன் விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது.
ஆர்டெமிஸ் திட்டத்தை வரலாற்று சாதனை என்று விஞ்ஞானிகள் புகழ்ந்தனர். மேலும், இந்தத் திட்டம் வெற்றிக்கரமாக நிறைவேற்றபட்டால், அடுத்த 8 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் நிலவுக்குச் செல்லலாம் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தற்போது, ஒரு மாதம் ஆன நிலையில், விண்ணில் செலுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 விண்கலம், நிலவுக்கு 130 கிமீ தொலைவிலிருந்து துல்லியமாக படமெடுத்து அனுப்பியுள்ளது. அதுவும் மிக நெருக்கமாக நிலவின் மேற்பரப்பை ஆர்டெமிஸ் 1 எடுத்துள்ள படங்கள் கண்களைப் பறிக்கும் வண்ணம் அமைந்துள்ளன.
நிலவை புகைப்படம் எடுத்த நிலையில், மீண்டும் பூமி திரும்ப உள்ளது ஆர்டெமிஸ் 1. அதன்படி டிசம்பர் 11-ஆம் தேதி ஆர்டெமிஸ் 1 பூமிக்கு திரும்பும் என்று நாசா தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 1969 ஜூலை 20-ம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார். வரும் 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியன் (ORION) என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த 2014-ம் ஆண்டில் ஆளில்லாமல் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. இந்த நிலையில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் திட்டத்தில் நாசா ஆர்வம் காட்டி வருகிறது.