பாஜகவில் இருந்து சூர்யா சிவா விலகல்: ட்விட்டரில் அண்ணாமலைக்கு கோரிக்கை

சென்னை: அவதூறு ஆடியோ விவகாரத்தில் 6 மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக சூர்யா சிவா தெரிவித்துள்ளார். திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார்.

அவருக்கு பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், சூர்யா சிவா, கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரண் இடையேயான சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த, கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம், “சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும் டெய்சிக்கு என் ஆறுதல் மற்றும் ஆதரவு” என தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார்.

இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக காயத்ரி ரகுராம் ஈடுபட்டு வருவதாகக் கூறி 6 மாதம் காலம் அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இந்த விவகாரத்தில் சூர்யா சிவா, டெய்சி சரண் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பின்னர், சமாதானமாகச் செல்வதாக இருவரும் ஒன்றாகப் பேட்டியும் அளித்தனர். இருப்பினும், ஆடியோவில் அவதூறாகப் பேசியதை சுட்டிக்காட்டி, சூர்யா சிவாவை 6 மாத காலத்துக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்தார்.இந்நிலையில், பாஜகவில் இருந்து தான் விலகுவதாக திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவில், “அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.

அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்தகால பாஜகவைப் போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி” என்று தெரிவித்துள்ளார்.மேலும், தனது பதவி விலகல் கடிதத்தையும் அண்ணாமலைக்கு சூர்யா சிவா அனுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.