
டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல் முடிவுகளுக்காக டெல்லி மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே ஆவலுடன் காத்திருக்கிறது. தலைநகரின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலின் முடிவுகள் இது.
டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் 50.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 129வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 106 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன. கதிபூர், சாந்த்நகர், ஜரோடா ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது